Wednesday, February 18, 2009

வசந்தகாலங்கள்...
நான் வசந்தசீலன். உங்களைப் போலவே இந்த உலகத்தினுள் சொல்லாமல் கொள்ளாமல் தள்ளிவிடப்பட்டவன். சாதாரண மனிதப் பிராணி. ஆனால் நான் வாழும் இந்த உலகைப் பற்றியும் என்னைச் சூழ வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மனிதர்களைப் பற்றியும் மிக முக்கியமாக 'வசந்தசீலன்' என்று பெயரிடப்பட்டு எனக்கு தரப்பட்டிருக்கும் இந்த உடலை அல்லது உயிரைப் பற்றியும் நிறைய யோசித்துக் கொண்டிருப்பவன். சொல்லாமலே தரப்பட்டு சொல்லாமலே பறிக்கப்படப் போகும் இந்த வாழ்க்கையை முழுதாக வாழ்ந்து விடத் துடிக்கும் ஒரு சுயநலவாதி.

முகம் ஒன்று. உதய தினம்...

சற்றுப் பின்தங்கிய ஒரு கிராமம். அத்தியாவசியத் தேவையான வைத்தியத்திற்கும் சுமார் ஒன்றரைக் கிலோமீட்டர் தள்ளியிருக்கும் அரசினர் வைத்திய சாலைக்கு செல்லும் மக்கள். இற்றைக்கு சரியாக முப்பது வருடங்களுக்கு முன்பு மார்கழி மாதக் குளிரில் அந்த வைத்தியசாலையில் ஒரு பிரசவம். தந்தை, தாய், பிறப்புப் போட்டியில் முந்திவிட்ட நான்கு சகோதரர்கள், உற்றார் உறவினர் சற்றுப் படபடப்புடன் எதிர்பார்த்திருக்க ஐந்தாவதாக ஓர் ஆண் குழந்தை இப்பூமியின் மிச்சமிருக்கும் வளங்களிலும் பங்கு போட வந்து ஜெனிக்கிறது. எல்லோர் வாயிலும் உச்...ஆண் குழந்தை பிறந்தால் சந்தோசிக்கும் கலாச்சாரத்தில் பிறந்தும் ஐந்தாவதாக பெண் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு யோகம் என்றொரு இன்னொரு நம்பிக்கை அதனைக் குழப்ப இதுவும் ஆண் குழந்தைதானா என்ற ஒரு சலிப்பு மேலிட அனைவரும் வீடு திரும்புகின்றனர். பல மைல் தூரத்திற்கு அப்பால் இருந்து வந்த அதன் பெரியப்பா அந்தக் குழந்தையைப் பார்க்காமலே தன் ஊருக்கு போய் விடுகிறார். அது பிறந்த அன்று கொண்டாடப்படும் ஒரு கிறிஸ்தவத் தெய்வமான 'லூசி' என்ற ஒரு பெண் பெயர் கூட ஏற்கனவே தயாராய் வைத்திருந்தார்கள். ஆனால் அதனை வைக்க முடியாமல் போய்விடுகிறது. அந்தக் குழந்தையின் அப்பா மற்றும் அண்ணாமார்களின் பெயர்கள் எல்லாம் 'சீலன்' என்ற பெயரில் முடிவடையும். எனவே இக்குழந்தைக்கும் 'சீலன்' என்று முடிப்பதற்கு அமைவாக பெயர் தேடப்பட்டு இறுதியில் 'வசந்தசீலன்' என்று திரு நாமம் வழங்கப்படுகிறது.

என் அப்பா ஒரு அரசாங்க உத்தியோகத்தர். மாதாமாதம் நிச்சயமாக சம்பளம் வந்துவிடும்; அதனால் சாப்பாட்டுக்காவது பஞ்சமிருக்காது என்ற உத்தரவாதமளிக்கப்பட்ட அரசு பதவி. அரசு இயந்திரத்தின் ஆயிரமாயிரம் கைகளில் ஒன்றான ஓர் இயந்திரன். மும்மொழிகளில் எழுத வாசிக்க பேச முடிந்த அதிதிறமைச் சித்தியாளராய் இருந்தாலும் 'காக்கா பிடித்தல்' எனும் அரச தேசிய மொழியில் ஆனா, ஆவன்னா கூடத் தெரியாதவர்.

என் அம்மா ஒரு இல்லத்தரசி. உண்மையிலேயே எங்கள் வீட்டின் ஆட்சியாளர். அப்பாவின் மதிப்பான பதவியின் மிகக் குறைந்த சம்பளத்தில் குடும்பம் நடத்திய ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்த பிரமாதமான பொருளியல்வாதி. அப்பா எட்டு மணி நேரம் வீட்டுக்காக உழைக்க அம்மா இருபத்து நான்கு மணி நேரம் உழைத்தார். மேலதிகமாக தையல் மெசினை வேலை வாங்கி கொஞ்சம் சம்பாதித்தவர். அதன் புண்ணியத்தில் எங்கள் ஆடைகளின் தையல் கூலி இல்லாமல் போனது.

நான் பிறந்து நான்கு வருடங்களின் பின் எனக்கு சுய உணர்வு வந்தபோது என் மூத்த அண்ணா திருச்சபையில் சேர்ந்து பாவிகளை மீட்பதற்காக குருவானவராகும் முயற்சியில் யாழ்பாணத்தில் படித்துக் கொண்டிருந்தார். இரண்டாவது அண்ணன் மன்னாரில் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் படிப்பதற்காக அங்கிருக்கும் விடுதியில் சேர்ந்திருந்தார். அப்பா, அம்மா, எனக்கு நேர் மூத்த இரு அண்ணாக்கள் இவர்களுடன் விடத்தல் தீவு எனும் சற்று அழகிய கிராமத்திலே எனது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த என் வாழ்க்கை இனிதே ஆரம்பித்தது...
முதலில் என் கிராமம். அழகிய பூஞ்சோலைகள் நிறைந்த பச்சைப் பசேலென விரிந்த வயல் வெளிகள் நிறைந்த....இப்படி வர்ணிக்க முடியாவிட்டாலும் அது ஒரு வித்தியாசமான கிராமம். இலங்கை நாட்டின் மன்னார் மாவட்டத்தில் நகரிலிருந்து சுமார் பதினைந்து மைல்கள் தள்ளி கடற்கரை அருகில் அமைந்திருக்கிறது. 'நாயாறு' என்றழைக்கப்படும் ஒரு 'நதி' கிராமத்தின் அருகே கடலில் கலக்கிறது. கிராமத்திலிருந்து ஒரு மைல் தள்ளி மக்களின் ஒற்றுமைச் சின்னமாக ஒரு குளம். இப்படி ஒரு கிராமத்திலேயே ஆறு, குளம், கடல் என்பன இருப்பது மட்டும் ஆச்சரியமல்ல. ஊரவர்களின் பிரதான தொழில்களாக மீன் பிடி, விவசாயம் என் இரண்டுமே காணப்பட்டன. இங்கே பெரும்பான்மையாக கிறிஸ்தவர்கள் வாழ்ந்ததாலோ அல்லது அவர்களின் ஒற்றுமையை காட்டும் விதமாகவோ மாதா மற்றும் யாகப்பர் என இரு தேவாலயங்கள் காணப்படுகின்றன. இன்னும் இந்துக்களுக்கு ஒரு கோவிலும் இஸ்லாமியர்களுக்கு ஒரு மசூதியும் காணப்படுகின்றன. அடுத்த தலைமுறை புத்திசாலிகளை உருவாக்குவதற்கு ஒரு கிறிஸ்தவ பாடசாலையும் ஒரு முஸ்லீம் பாடசாலையும் காணப்படுகின்றன. என் வீடு ஊரின் நடுவில் அமைந்திருக்கிறது.

எனக்கு இந்த வாழ்க்கையின் மிக மிக ஆரம்ப நினைவாக ஒரு சம்பவம் ஞாபகமிருக்கிறது. நான் என் வீட்டின் உள் அறையிலிருந்து வெளியே வந்து வெளி வாசற் படியில் அமர்கின்றேன். அப்போது உள்ளேயிருந்து அம்மாவின் குரல் ஒரு உடுப்பும் அணியாமல் வெளியே இருக்காதே என்று கண்டிக்கிறது. அப்போதுதான் நான் ஆதாமை போல நிர்வாணம் என்றால் என்பதை முதன்முதலாக உணர்ந்து சென்று காற்சட்டையை போட்டுக் கொள்கிறேன்.

எங்கள் வீடு சிறு மொட்டை மாடியைக் கொண்டது. ஆனால் நான் பிறக்கும் போதே அந்த வீட்டிற்கு நாற்பது வயதாகிவிட்டிருந்தது. பழங்காலத் தூண்கள், கோலங்களைக் கொண்டது. என் வீட்டுக் கண்ணாடியினால் வெளியே பார்த்தால் அக்கண்ணாடியின் அமைப்பினால் வெளியே வரும் நபர் நான்கைந்து பேராகத் தெரிவார். அதனை பார்த்துக் கொண்டிருப்பதும் முற்றத்துக் கேற்றைப் பிடித்து தொங்கிக் கொண்டே அங்குமிங்குமாக ஆடுவதும் மொட்டை மாடியில் நின்று கொண்டு வீதியில் போய் வருவோரை வேடிக்கை பார்ப்பதும்தான் என் பொழுதுபோக்காக இருந்தது. சில நேரங்களில் வீட்டுக் கதிரைகளை எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கிவிட்டு பக்கத்து சிறுவர்களுடன் 'பஸ் விளையாட்டு' விளையாடுவோம்.


எனது இரண்டாவது தெளிவான நினைவுச் சம்பவம் நான் நேசரிக்குச் சென்றது. ஆனால் அந்நேசரிக்குப் போவதற்கு முன்பே எங்கள் ஊர்ப் பிள்ளைகள் என் வீட்டிற்கு அருகில் ஒரு மண் வீட்டில் வசித்த ஒரு பெண்மணியிடம் ஆரம்ப எழுத்துக்கள் படிக்க போனது ஞாபகமிருக்கிறது. ஆனால் நானும் போனதாய் இல்லை. நான் நேசரிக்குச் செல்ல ஆரம்பித்த பின் ஒருநாள் நாங்களும் ஆசிரியரும் ஆலயத்திற்கு சென்று செபம் செய்தபின் வெளியே வந்தோம். "சரி, எல்லோரும் வீட்டுக்குப் போங்க.." என்று டீச்சர் சொன்னதுதான் தாமதம் எல்லோரும் '' என்று கூச்சலிட்டபடியே ஓடினார்கள். (எங்கள் வீடுகள் அருகிலேயே இருந்தமையால் எங்களைக் கூட்டிப் போக பெரியவர்கள் யாரும் வருவதில்லை) . ஆனால் நான் கூச்சலிடவுமில்லை. ஓடவுமில்லை. நான் பிறப்பிலேயே அமைதியான கூச்ச சுபாவமுள்ளவனாகத்தான் இருந்திருக்கிறேன். என் நண்பன் மைக்கேல் தன் சேர்ட்டைக் கழற்றி காற்றில் சுழற்றியபடி ஓடினான். நான் வீட்டுக்கு வந்தவுடன் இதை என் அம்மாவிடம் சொன்னேன். "அதெல்லாம் கெட்ட பழக்கம். அப்படியெல்லாம் செய்யக்கூடாது, சரியா?" என்று அம்மா எனக்கு அறிவுறுத்தினார். நான் முதன் முதலாக நல்ல பிள்ளையாக இருப்பதற்கான ஒரு விதியை அறிந்து கொண்டவனாக தலையாட்டினேன்.
நாங்கள் எங்கள் அப்பாவின் பெரியய்யா வீட்டிலேயே இருந்தோம். எங்கள் வீட்டில் பெரிய வீடு, சிறிய வீடு என் இரு பகுதிகள் இருக்கின்றன. சிறிய வீடு இரு அறைகளையும் ஒரு சமையலறையையும் கொண்டது. அதில் பெரியய்யாவும் பெரியம்மாவும் வசித்தார்கள். பெரிய வீடு அளவில் பெரிய இரு அறைகளையும் வரவேற்பறையையும் கொண்டது. அதில் நாங்கள் வசித்தோம். பெரியய்யாவுக்கு பிள்ளைகள் இல்லை. அவர் தன் வீட்டின் முன் பகுதியை ஒரு பல சரக்கு கடையாக நடத்தி வந்தார்.

நான் அப்போது கடைசிப் பிள்ளையாக இருந்ததனால் எல்லோரும் என்னைக் 'கடைக் குட்டி' என்று அழைத்தார்கள். ஆனால் அப்பதவியும் வெகு விரைவில் பறி போனது. என் ஐந்தாவது வயதில் அம்மாவின் வயிற்றில் உண்மையான கடைக்குட்டி தோன்றிவிட்டது. ஒரு நாள் நான் நேசரி முடிந்து வந்தபோது அம்மாவைச் சுற்றி அண்ணாக்கள் நின்றிருந்தார்கள்.

அம்மா " தம்பி வயிற்றில் உதைக்கிறான், தொட்டுப்பார்..."என்றார்.

நான் தொட்டுப் பார்த்தேன். அப்படி ஏதும் உதைக்கவில்லை.


"இல்லையே!" என்று மறுத்தேன். எல்லோரும் சிரித்தார்கள்.

எனக்கு ஆறு வயதாகியபோது எல்லோரும் பெண் பிள்ளையை எதிர்பார்த்து சலித்து ஓய்ந்திருந்தபோது ஆறாவது பிள்ளையாக என் தங்கை பிறந்தாள். அவளின் குழந்தை பிராய நினைவுகள் இன்னும் என் மனதினின்றும் அகலவில்லை. பெரியய்யாவும் பெரியம்மாவும் அவள் மீது பாச மழையே பொழிந்தார்கள். ஒரேயொரு தங்கச்சி, ஒரேயொரு மகள், கடைக்குட்டி, ஐந்து அண்ணன்மாருக்கு ஒரே தங்கச்சி என்ற பல பட்டங்களை அவள் தன் தலையில் சுமந்தாள். சிறுவயதில் அவள் அடம்பிடித்து அழும் காட்சி இன்னும் என் கண் முன் நிற்கிறது. வாயை தன் பெரியம்மா போல உம்மென்று கோணலாக வைத்துக்கொண்டு மண்ணில் விழுந்து புரண்டு அழுவாள். அதில் வேடிக்கை என்னவென்றால் வீட்டுக்குள் இருந்தாலும் வெளியே முற்றத்திற்கு ஓடி வந்து மண்ணில் 'தொபீரென' விழுவாள். அவள் அழுவதை பார்த்து நாங்கள் சிரிப்போம்.


பெரியய்யா அவள் மீது உயிரையே வைத்திருந்தார். அவர் அவளை தன் மடியில் வைத்துக் கொண்டு "தங்கம்...தங்கம்...என்ட தங்கம்...தங்கம்..."என்று தாலாட்டுப் பாடுவது இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.


ஒரு முறை பக்கத்து வீட்டு சுமத்ரா எனும் இளம்பெண் எங்கள் வீட்டிற்கு வந்து என் தங்கையுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அவள் செல்லமாக தங்கையைப் பார்த்து " அடிக் கள்ளி!" என்றாள். அதைக் கேட்டதுதான் தாமதம் பெரியய்யா " என் தங்கத்தையா கள்ளி என்று சொல்கிறாய்?" என்று அவளை கண்டபடி ஏச ஆரம்பித்து விட்டார். அவள் அழ அழ விடாமல் பெரியய்யா தொடர்ந்து ஏசிக் கொண்டேயிருக்க அதைக் கேட்டுக் கொண்டிருந்த என் அம்மா ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் "அவள் என் மகளைதானே சொன்னாள். பரவாயில்லை. நீங்கள் அதுக் கொன்றும் சொல்லத் தேவையில்லை!" என்று முகத்திற்கு நேரே சொல்லிவிட அவர் அதிர்ந்து பேச்சு மூச்சில்லாமல் போனார்.


என் அம்மா அப்படி பெரியவர்களை மதிக்காமல் பேசுபவரல்ல. (வழமையாக அவர் பெரியய்யாவுடன் பேசவேமாட்டார்.) ஆனால் சில நேரங்களில் தன் மனதில் அநியாயம் என்று பட்டால் யாரென்றும் பாராமல் பொங்கிவிடுவார். என் தங்கை மீது வைத்திருந்த அளவற்ற பாசத்தால் அந்த நேரத்தில் பெரியய்யா ஒரு குழந்தையாக மாறிவிட்டிருந்தார்.


ஆனால் இந்த சம்பவம் பெரியய்யாவை வெகுவாக பாதித்துவிட்டது. அவர் இறந்த பிறகு அவரது டைரியில் அவர் இதனைக் குறிப்பிட்டு 'இன்று என் தங்கத்தை ஏசியவளை நான் ஏசினேன். ஆனால் அதன் அம்மாவோ என்னை ஏசி விட்டார் ' என்று எழுதியிருந்ததை வாசித்தோம்.


இந்த இடத்தில் பெரியய்யாவைப் பற்றி சில விடயங்கள்...பெரியய்யா பழைய படங்களில் வரும் அப்பாக்களைப் போலலல்லாமல் உடல் திடகாத்திரமும் உயரமும் கொண்டவர். வயது அப்போது எண்பத்தி நான்கு. கொஞ்சம் கர்வம் பிடித்தவர் என்றும் சொல்லலாம். அக்காலத்திற்கே உரிய சாதி வெறியும் அவரிடம் குடி கொண்டிருந்தது. இதற்கு உதாரணமாக ஒன்றைச் சொல்லலாம். எங்கள் வீட்டு முற்றத்து மதிலில் வீட்டுக்குள் நுழைவதற்கு பிரதான வாயிலை விட மூலையில் இன்னொரு சிறு வாயிலும் இருந்தது. அக்காலத்தில் கிராமங்களில் மலசலகூடத்தில் வாளி வைத்து எடுக்கும் முறை இருந்தது. ஒவ்வொரு நாளும் அதனை மாற்றுவதற்கு தாழ்ந்த சாதியைச் சேர்ந்த 'கோணாமலை' என்றொருவர் எங்கள் வீட்டிற்கு வருவார்.(நிச்சயமாக அது சொந்தப் பெயராக இருக்காது என்று நினைக்கிறேன்!) அவர் வந்து செல்வதற்காகத்தான் விசேடமாக தனியே சிறு வாயில் அமைக்கப் பட்டிருந்தது. அது சுத்தத்தை மட்டும் அல்லாது பெரியய்யாவின் சாதி உணர்வையும் காட்டி நின்றது.


என் தங்கையினால் முரண்பட்ட இன்னொரு உறவும் இருக்கிறது. அவர் அப்பாவின் தங்கை. எங்கள் மாமி. அவர் ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு வந்து என் தங்கையின் நீளமான கூந்தலைக் கண்டவர் தான் இவளுக்கு 'பொப் கட்' செய்கிறேன் என்று சொல்லி அதனை வெட்டி விட்டார். இதைக் கேள்விபட்ட அம்மா வந்து "என்ன இப்படி செய்து விட்டீர்கள்?" என்று ஆதங்கப்பட்டதுதான் தாமதம் "நான் என் அண்ணாவின் மகளுக்கு என்னவும் செய்வேன். அதைக் கேட்க நீ யார்?" என்று மாமி பொரிந்து தாள்ளத் தொடங்கினார். அம்மா திகைத்துப் போய் அழுது கொண்டு நின்றதும் மாமி பெரியய்யா வீட்டு வாசற் படியில் நின்று கொண்டு ஏசிக் கொண்டிருந்ததும் அப்படியே என் மனத்திரையில் நிற்கின்றது. ஒரு தாயினைப் பார்த்து இப்படிக் கேட்ட மாமியின் சிறு பிள்ளைத்தனத்தை இப்போது நான் யோசித்துப் பார்க்கின்றேன். சிலவேளைகளில் மாமியின் வார்த்தைகளுக்கு வேறு மறைமுக அர்த்தங்களும் இருந்திருக்கலாம். அது இப்படி ஒரு சிறு பிள்ளைத்தனமான கேள்வியாக உருவெடுத்திருக்கலாம். ஆனாலும் என் அம்மா அழுது நான் பார்த்த முதல் நிகழ்ச்சி இது.


இந்த இடத்தில் ஒரு விடயத்தை உங்களுக்கு உறுதியாகாக் கூறிக் கொள்ள ஆசைப்படுகிறேன். இங்கே நான் விபரிக்கின்ற மற்றும் விபரிக்கப் போகின்ற சம்பவங்களில் சம்பந்தப்படும் நபர்களின் நடத்தைகளைப் பற்றிய என் எண்ணக்கருக்களை மட்டுமே நான் கூறுகிறேன். ஒரே சம்பவத்தை வேறு வேறு நபர்கள் வேறு வேறு விதமாக பார்ப்பார்கள். நான் எப்போதுமே யாரையுமே நல்லவர்கள், கெட்டவர்கள் என வரையறுத்துவிடுவதில்லை. ஒரு குறிப்பிட்ட நபர் குறிப்பிட்ட சூழ்நிலையில் எப்படி நடந்து கொள்கிறார் என்றும் அந்த இடத்தில் அவரது நடத்தை சரியா பிழையா என்பதை மட்டும் என கண்ணோட்டத்தில் விதந்துரைக்கின்றேன். மாமி, அம்மா,நீங்கள் மற்றும் நான் உட்பட எல்லோரும் சூழ்நிலைக் கைதிகளே என்பதை மனதிற் கொள்க.நிற்க. என் தங்கையின் புராணத்தை தற்காலிகமாக இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.அடுத்து எல்லோர் வாழ்விலும் மறக்க முடியாத சம்பவமாக அமைவதுதான் என் வாழ்விலும் மறக்க முடியாத சம்பவமாக நடந்தது. அது நான் முறைசார் கல்விக்குள் காலடி எடுத்து வைத்த நாள். அதுதான் நான் பாடசாலைக்கு சென்ற முதல் நாள். எங்கள் கிராமத்து பாடசாலைதான். பெயர் விடத்தல்தீவு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை. அப்பாதான் என்னைக் கூட்டிக் கொண்டு போனார். நான் எந்த அடமும் பிடிக்கவில்லை.அதிபரின் அறைக்கு சென்றோம். அப்பா என் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி அதிபருடன் நீண்ட நேரமாக திட்டமிட்டுக் கொண்டிருக்க நான் அந்த அறையிலிருந்த ஜேசுநாதரின் கலண்டரையே பார்த்துக் கொண்டிருந்தேன். இரக்கமான கண்கள். அருள் வழங்கும் கைகள். இதே மாதிரியான ஜேசுவின் படம் நான் ஏற்கனவே நான் பார்த்திருந்தாலும் அன்றைக்கு நெடுநேரம் உற்று பார்த்துக் கொண்டிருந்தேன்.


பின் முதலாம் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்னை அழைத்துச் சென்றார். நான் அப்பா எங்கே போனார் என்று கூட கவனிக்காமல் அவர் பின்னாலேயே சென்றேன். வகுப்பில் எப்படித்தான் வந்தவுடனேயே என்னைபற்றி கணித்து விட்டார்களோ தெரியவில்லை; கடைசி வரிசையில் இருத்தப்பட்டேன். பாடங்கள் நடந்தன. ஒரே ஊரானபடியாலும் வகுப்பில் இருந்த மாணவர்களில் அநேகம்பேரைத் தெரிந்திருந்தமையாலும் பயம் ஏதும் ஏற்படவில்லை.
என் பக்கத்தில் ரஜினி அமர்ந்திருந்தான். அவன் என் பக்கத்து வீட்டுக்காரன்தான். அவன்தான் என் முதலாவது தோழன். ஆனால் என் முதல் நாளை மறக்கமுடியாமல் ஆக்கியவனும் அவன்தான். தன் பென்சில் கூர் முறிந்து விட்டது என்று என்னுடையதைக் கேட்டான். கொடுத்தேன். அடுத்த நிமிடம் என் பென்சிலேயே இரண்டாக முறித்துவிட்டான். அதைப் பற்றி நான் பெரிதாக கவலைப் படாமல் இருந்தேன். பின் ஆசிரியர் வந்து "முதல் நாளே பென்சிலை முறித்துவிட்டாயா?"என்று 'செல்லமாக' கேட்டபோதுதான் அதனைப் பற்றிக் கவலைப் படவேண்டும் என்று புரிந்தது. எனக்கு முதன் முதலாக கவலை என்ற எண்ணக்கருவைக் கற்பித்தவர் அவர்தான்.

நான் முதன் முதலாக ஆனா ஆவன்னா எழுதியது ஞாபகம் இல்லை என்றாலும் முதன்முதலாக என் பெயரை ஆங்கிலத்தில் எழுதியது இருக்கிறது. ஏனெனில் அதை சொல்லித் தந்தது என் அப்பா. வீட்டு முற்றத்தில் நான் கேட்டதற்காக அப்பா அதனை மண்ணில் எழுதிக் காட்டினார். VASANTHASEELANஅடுத்து நான் முதன் முதலாக காயப்பட்ட ஞாபகம் நெஞ்சில் இனிக்கின்றது...! எனக்கும் விளையாட்டிற்கும் போன ஜென்ம விரோதம். கடும் பகை. இது வரைக்கும் எங்குமே ஸ்போர்ட்ஸ் பக்கம் தலை வைத்து படுத்ததில்லை. என் உடலுக்கும் முக்கியமாக என் மனத்திலும் விளையாட்டு ஒரு ஒவ்வாமையாக இருந்தது. அதனால் முதலாம் ஆண்டில் பாடசாலையில் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நடந்தபோது அதனைப் வேடிக்கை பார்க்கக் கூட போகாமல் வகுப்பில் இருந்தேன். பின் யாரோ ஒருவன் வற்புறுத்தினான் என்று புறப்பட்டேன். மைதானம் பாடசாலைக்கு பின்னால் இருந்தது. விதி நேர் வழியால் போனால் ஆசிரியர்கள் அடிப்பார்கள் என்று அறுந்து கிடந்த முட்கம்பி வேலியால் போவோம் என்றது. என்னோடு வந்தவன் வெகு லாவகமாக நுழைந்து அப்பக்கம் சென்றுவிட்டான். நான் நுழைந்தபோது இவ்வளவு நல்ல சிறுவன் இப்படி குறுக்கு வழியெல்லாம் பாவிக்க அனுமதித்தால் கேட்டுப் போய்விடுவான் என்று எண்ணிய முட்கம்பி உடனடியாக தண்டனை கொடுக்க எண்ணி என் தலையில் ஆழமாக ஒரு கீறு போட்டது. வெளியே வந்து விட்ட எனக்கு முதலில் அது உறைக்கவில்லை. சற்று நேரத்தில் என்ன இது தலையில் ஏதோ திரவமாக கசகசக்கிறது என்று தலையில் கை வைத்துப் பார்த்த எனக்கு திக்கென்றது. அப்படியே 'கொழகொழவென' ரத்தம் கொட்டியது. முதலில் அதற்கு என்ன செய்யவேண்டும் என்றே புரியாமல் நின்றேன். அப்போது அருகில் நின்ற அருமை நண்பன் அதைப் பார்த்து விட்டு " ஆஹா, தலையில காயம்பட்டு விட்டாயா... உன் வீட்டில் நல்லா அடி வாங்கப் போகிறாய்!" என்று கை கொட்டி சிரித்தான். எனக்கு அப்போதுதான் காயம் வலிக்க ஆரம்பித்தது. ஆனால் அதை விட இக்காயத்தை யாரும் பார்த்துவிடுவார்களோ என்ற பயம் மேலோங்கியது. பாடசாலையில் யாரிடமும் சொல்லாமலே வீட்டை நோக்கி ஓடினேன். ஆனால் வீட்டில் இத்தனை சாதரணமாக எடுத்துக் கொண்டார்கள். நடந்த சம்பவத்தைக் கேட்டார்கள். நான் முழு உண்மையும் சொன்னேன். அருகிலுருந்த ஒரு நாட்டு வைத்தியரிடம் கொண்டு போய் தலையில் வட்டமாக கட்டுப் போட்டு விட்டார்கள். அம்மா "பார்த்துப் போறதில்லையா?" என்று ஒரு வரிதான் கண்டித்தார். ஆனால் மருந்து போட்டு விட்ட அவ்வைத்தியர் நான்தான் ஏதோ இந்த ஊரிலேயே தலை சிறந்த குழப்படிகாரன் என்று முடிவு செய்து சிகிச்சை முடியும் வரை அட்வைஸ் என்ற பெயரில் திட்டி கொண்டே இருந்தார்.


ஆனால் இச் சம்பவத்தில் ஒரு உண்மையைக் கற்றுக் கொண்டேன். என்ன சம்பவம் நடந்தாலும் உண்மையை எல்லோரிடமும் முக்கியமாக வீட்டில் சொல்லி விடுவது நல்லது. விளைவு எப்படி இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் இத்தீர்மானத்தின் மூலம் நான் சில பக்க விளைவுகளையும் பிற்காலத்தில் சந்தித்தேன்.


அடுத்து முதன் முதலாக ஏமாற்றமடைந்த சம்பவம். என் அப்பா ஒரு யமஹா பைக் வைத்திருந்தார். ஆனால் சத்தியமாக அதில் நான் பிரயாணித்ததாக இதுவரைக்கும் எனக்கு ஞாபகம் இல்லை.சிலவேளை மிகச் சிறு வயதில் சென்றிருக்கலாம்.


ஒரு நாள் அப்பா என் அண்ணாவை பைக்கில் ஏற்றிக் கொண்டு எங்கோ செல்லப் போவதை கண்ட நான் என்னையும் கொண்டு செல்லும்படி அடம்பிடித்தேன். முடியாது என்று மறுத்த என் பெற்றோர் கடைசியில் பின்னேரம் வந்து அப்பா என்னைக் கூட்டிச் செல்வார் என்று வாக்குறுதி தந்தார்கள். அதிசயமாக நானும் சமாதானமாகிவிட்டேன். எவர் எதைச் சொன்னாலும் உடனே நம்பிவிடும் 'அப்பாவிக்' குணம் எனக்கு பிறப்பிலேயே இருந்திருக்கிறது என்று நினைக்கிறேன். அன்று முழுவதும் மாலை எப்போது வரும் எங்கள் சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தபடியே காத்திருந்தேன். ஆனால் அன்று இரவாகியும் அப்பா வரவேயில்லை. எங்கேயோ தங்கிவிட்டார். அது அம்மாவிற்கும் தெரியும். என்னைச் சமாளிப்பதற்காக வருவார் என்று பொய் சொல்லி இருக்கிறார்கள். பின் நான் அம்மாவிடம் கேட்டபோது அம்மா பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு " ஐயோ, அப்பா இன்னும் வரவில்லையே...பிள்ளையை பைக்கில ஏத்திக் கொண்டு போறதெண்டு சொல்லிப் போட்டு ஏமாத்திப் போட்டார்தானே...!" என்றார். பின் தையல் வேலையாக வீட்டுக்கு வந்திருந்த வதனா என்ற பக்கத்து வீட்டுப் பெண்ணிடமும் விஷயத்தை அம்மா சொல்ல அவரும் 'உச்' கொட்டினார். இருவரும் உண்மையாகக் கவலைப்படவில்லை. நடிக்கிறார்கள் என்பது எனக்கு புரிந்தது.


நான் அப்பாவுடன் பைக்கில் போகாமல் விட்டதைவிட அப்பாவும் அம்மாவும் என்னிடம் பொய் கூட சொல்வார்களா என்பதே எனக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது. பிற்காலத்தில் நான் மிக உறுதியாக சிலவற்றை எதிர்பார்க்கும்போதே அடிமனதில் நான் ஏமாந்தும் போகலாம் என்ற ஒரு எண்ணம் ஓடுவதை இச்சம்பவத்தின் தாக்கத்தால் தவிர்க்கமுடியாமல் போனது.


சிறுவயதில் 'போளை' என்று எங்களூரில் அழைக்கப்பட்ட கோலிக்குண்டு விளையாட்டு, கடற் சிப்பிகளைக் கொண்டு ஆடும் ஒரு வகை ஆட்டம் மற்றும் கிளித்தட்டு போன்றவற்றை நானும் அயல் சிறுவர்களுடன் எங்கள் வீட்டின் முன்னாள் இருக்கும் வீதியில் ஆடியிருக்கிறேன். ஆனால் 'அழாப்பாமல்'( கள்ள ஆட்டம் ஆடாமல்) தோற்றுப் போகிறவனும் நான்தான். நல்லவன் என்பதால் அல்ல. அப்படி ஆடும் அளவுக்கு எனக்கு திறமை இல்லை என்பதே உண்மை.


கடற்கரை அருகே அமைந்த ஊர் என்றதும் நீண்ட வெள்ளை மணல்கள் பரந்திருக்க அலைகள் ஓவென ஓடிவந்து கால் நனைத்துவிட்டுப் போகும் கடல் என்று எண்ணிவிடாதீர்கள். எங்கள் ஊர்க் கரை ஓரம் முழுவதும் கடலில் கண்டால் காடுகள் சூழ்ந்திருப்பதால் ஊருடன் தொட்டுக் கொண்டிருக்கும் கடலில் அலைகளைக் காண முடியாது. அமைதியான கடலில் தோணிகளும் இயந்திரப் படகுகளும் வரிசை கட்டிக் கொண்டு நிற்பதை மட்டுமே காணலாம்.


என் அப்பா ஒரு அரசாங்க உத்தியோகத்தர் என்பதால் கடலுக்கும் எனக்கும் வெகு தூரம். ஊரில் கட்டிளம் பருவத்தினருக்கு பகுதி நேர வேலையே தங்கள் அப்பாக்களின் கடற்தொழிலுக்கு உதவுவதுதான். முக்கால்வாசி வீட்டுகளில் விதம்விதமான வலைகளும் 'பறி' எனப்படும் றால் போன்றவற்றை பிடிக்கப் பயன்படும் பெட்டிகளும் காணப்படும். ஆனால் ஒரு மீனவக் கிராமத்தில் பிறந்திருந்தாலும் என் பெற்றோருக்கு அதில் சம்பந்தமோ ஆர்வமோ இல்லாத காரணத்தினால் எனக்கு கடல் தொழிலைப் பற்றியோ குறைந்தது மீன்களின் வகைகளைப் பற்றியோ தெரியாமற் போய்விட்டது.எங்கள் ஊரின் இரு ஆலயங்களுக்கும் பொறுப்பாக ஒரு பாதிரியார் இருந்தார். அவர் பெயர் பீற்றர். அவர் ஞானப்பிரகாசியார் பீடப் பணியாளர் சபையை நடத்தினார். அதில் சிறுவர்கள் நாங்கள் இணைந்திருந்தோம். மாதாந்தம் கூட்டங்கள் நடைபெறும். எட்டு வயதிற்கு மேற்பட்டவர்கள் திருப்பலி வேலையில் குருவானவருக்கு உதவி செய்வதற்காக இச்சபையில் சேர்க்கப்பட்டார்கள். கொடுக்கப்பட்ட நேர அட்டவணைப் படி தினப் பூசையிலும் ஞாயிறுப் பூசைகளிலும்பாதிரியாரைப் போலவே நீண்ட தொங்கலாடைகளை அணிந்துகொண்டு பங்குபற்றினோம். ஞாயிறுப் பூசைக்கு சற்றுப் 'பெரிய' சிறுவர்களே அனுமதிக்கப்பட்டார்கள்.


தினமும் கடமை தரப்பட்ட மூன்று சிறுவர்களும் பூசை ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே ஆலயத்திற்கு சென்று பூசைக்கான ஆயத்த வேலைகளை செய்வோம். சிலவேளைகளில் காலை ஆறுமணிக்கு ஆரம்பிக்கும் பூசைக்கு ஐந்து மணிக்கே தனியே புறப்பட வேண்டியிருக்கும். அப்படி ஒருமுறை அதிகாலை இருளில் நான் ஆலயத்துக்கு செல்லும்போது வீதியில் படுத்திருந்த நாயை மிதித்து அது சீறிப் பாய உயிரைக் கையில் பிடித்தபடி விழுந்தடித்துக் கொண்டு ஓடியது ஞாபகம் வருகிறது.


நான் அச்சபையில் சேர்ந்து முப்பத்தாறு தடவைகள் பூசையில் பணியாற்றியிருக்கிறேன். அதை நான் எண்ணியதற்கான காரணத்தை சொன்னால் உங்களுக்கு சற்று நம்பக் கடினமாக இருக்கும். முன்றாம் ஆண்டு படிக்கும் போதே எனக்கு எதிர்காலம் பற்றி நிறைய கனவுகள் இருந்தன. அதிகம் யோசிப்பேன். அப்போதே அம்மா வாசிக்கும் நிறைய கதைப் புத்தகங்களை படித்ததாலோ என்னவோ பெரியவனானதும் நான் எப்படி வாழ்வேன், கதைகளில் நடக்கும் சம்பவங்கள் என் வாழ்க்கையிலும் நடக்குமா என சிந்திப்பேன். ஆனால் உறுதியாக நான் எதிர்காலத்தில் பணக்காரனாக புகழ் பெற்று வாழ்வேன் என்றுதான் நினைத்திருந்தேன். சிலவேளைகளில் இது கூட எல்லோரும் சின்ன வயதில் ஆசைப்படும் விடயமாக இருக்கலாம். ஆனால் புகழ் பெற்ற நபர்களின் வாழ்க்கை வரலாற்றினை பாடப் புத்தகங்களில் படிக்கும் போது அவர்கள் புகழ் பெறும் முன் அவர்களது சிறுவயதில் நடந்த சிறு விடயங்களைக் கூட விபரித்து எழுதியிருப்பார்கள்.அந்த மகான் இத்தனையாம் ஆண்டு இன்ன திகதியில் இன்னாருக்கு மகனாக அவதரித்தார்...சின்ன வயதில் இப்படியான சம்பவங்கள் நடைபெற்றன என்றெல்லாம் விபரித்திருப்பார்கள். அப்படியென்றால் நான் பெரியனானதும் அதுவும் பெரிய ஆளானதும் சின்ன வயதிலே நடந்த சம்பவங்களை என்னிடம் கேட்பார்கள் அல்லவா...?! அதற்காகவே சற்று மித மிஞ்சிய தன்னம்பிக்கையுடன் எல்லாவற்றையும் ஞாபகம் வைத்திருக்க முயற்சித்தேன்.


பீற்றர் பாதர் ஒரு வினோதமான மனிதர். எப்போது சிரிப்பார், எப்போது கொதிப்பார் என்றே சொல்ல முடியாது. அவருக்கு ஹிஸ்டீரியா நோய்தான் இருந்திருக்க வேண்டும். முதன்முதலாக ஞாயிறு பூசையில் பீடபணியாளராக களமிறக்கி விடப்பட்டபோது வழமையாக நான் பணியாற்றும் தினப் பூசைகளை விட வித்தியாசமான சடங்குகளைக் கொண்டிருந்ததால் பூசை வேளையில் ஏதோ தவறு செய்துவிட்டேன். அப்போதே பாதரின் முகம் அஷ்ட கோணலாவதை கவனித்தேன். உள்ளுர நடுக்கத்துடன் பூசை கழிந்தது. பூசையின் கடைசிப் பாடல் பாடப்பட பாதரும் நாங்களும் கோயிலின் பின் அறைக்குள் நுழைந்தோம். அவ்வளவுதான் அடுத்த கணம் பாதர் காத்திருந்ததுபோல வேகமாக வந்து 'கொடக்'கென்று தலையில் கொட்டினார்...அப்பா... இப்போதும் வலிக்கிறது!


ஆனால் அவரே பின்பு என்னைக் கூப்பிட்டு மன்னிப்புக் கேட்பது போல மென்மையாக பேசியபோது ஆச்சரியமாக இருந்தது. அப்போதுதான் அவர் என் பெயர் என்னவென்று கேட்டார். 'வசந்தசீலன்' என்றதும் "என்ன பெயர் இது? வசந்தன் கேள்விப்பட்டிருக்கிறேன். சீலன் கேள்விப்பட்டிருக்கிறேன். இது என்ன வசந்தசீலன்! வித்தியாசமான கலவையாய் இருக்கு. எனிவே, நைஸ் நேம் " என்றார். அவர் பேசிய ஆங்கிலம் புரியாவிட்டாலும் ஏதோ நைஸ் என்று நல்லதாகத்தான் பாராட்டுகிறார் என்று சந்தோசமாயிருந்தது.நான் கோபம் எதுவுமில்லாமல் புன்னகைப்பதைப் பார்த்த பாதர் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத அந்த வார்த்தைகளிக் கூறினார். "எனக்கு பெரியவர்களை விட உங்களைப் போல சிறுவர்களைத்தான் பிடிக்கும். ஏனென்றால் நீங்கள் தான் யார் உங்களுக்கு எந்தத் தீமை செய்தாலும் உடனடியாகவே அதனை மறந்து பழைய மாதிரியே பழகுவீர்கள். அந்த மன்னிக்கின்ற குணம் எனக்கு மிகவும் பிடிக்கும்" என்றார். அவர் சொன்னது சரிதான். நாம் சிறுவர்களாய் இருக்கும்போது பெரியவர்களோ அல்லது நண்பர்களோ நம்மோடு எப்படிக் கோபித்தாலும் சண்டை பிடித்தாலும் அடுத்த நாளே மறந்து மன்னித்து பழையபடி சேர்ந்து விடுகிறோம். ஆனால் பெரியவர்களாக வளர வளர இந்த மன்னிக்கும் குணம் அருகி மன்னிப்பவன் ஏமாளி என்பது போன்ற ஒரு மாயைக்குள் சிக்கிவிடுகிறோம். அதையே நினைத்து நினைத்து பழிவாங்கும் எண்ணத்தை வளர்த்து நமக்கு நாமே மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்கிறோம்.


ஆனால் பாதரின் ஹிஸ்டீரியா குணத்திற்கு சிறந்த உதாரணமாக ஊரார் ஆடிக்கடி பேசிக் கொள்ளும் ஒரு சம்பவம் உண்டு. நானும் சில சிறுவர்களும் ஏதோ ஆலய வேலையாக பாதரை சந்திக்கச் சென்றிருந்தோம். அது பாதர் மதியம் சாப்பிட்டுவிட்டு தூங்கும் நேரம். எனவே நாங்கள் அவர் தூங்கும் அறைக்கு வெளியே வரவேற்பறையில் சத்தம் போடாமல் அமர்ந்து காத்திருந்தோம். அப்போது ஒரு பிச்சைக்காரி அங்கே வந்தாள். பாதரை விசாரித்தாள். நாங்கள் நிலைமையைச் சொல்லி தூங்குபவரை எழுப்ப முடியாது. போய்விட்டு பிறகு வரச் சொன்னோம். ஆனால் அந்த மனுசி கேட்கவில்லை. நாங்கள் பொய் சொல்லுகிறோம் என்று நினைத்து விட்டாளோ என்னவோ பிடிவாதமாக பாதரை கூப்பிடும்படி கேட்டுக் கொண்டே நின்றாள். இந்தத் தகராறு சப்தத்தில் பாதர் விழித்து விட்டார். வேலைக்காரனைக் கூப்பிட்டு என்னவென்று கேட்டார். அவன் விடயத்தை சொல்ல " ஒன்றும் கிடையாது . போகச் சொல்லு!" என்றார் தூக்கம் கலைந்த கோபத்தில். அவனும் வந்து சொல்ல அப்போதும் அவள் " சோறாவது போடுங்க சுவாமி!"என்று உரத்துக் கத்தினாள். அவ்வளவுதான். பாதருக்கு வந்ததே கோபம். "சோறா வேண்டும் இரு, வருகிறேன்" என்றபடி சமையலறைக்குள் போய் அடுப்பில் இருந்த சுடுதண்ணிப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு வந்து அவள் முகத்திலே வீசிவிட்டார். நாங்கள் அப்படியே விக்கித்துப் போய்விட்டோம்.


பொதுவாக சினிமாக்களிலும் நம் மனங்களிலும் பாதிரிமார்கள் என்றாலே கையில் பைபிளுடன் சாந்தமான முகத்துடன் பின்னணியில் தேவாலயம் தெரிய ஆலய மணி ஒலிக்கும்படியாகத்தான் கற்பனை தோன்றும். ஆனால் அவர்களும் மனிதர்கள்தான். சாதாரண மனிதர்களின் கோபதாபங்கள், நேசபாசங்கள் அவர்களுக்கும் உண்டு என்பதை நான் இத்தால் புரிந்துகொண்டேன்.


ஆனால் மேற்படி சம்பவத்தை வைத்துக் கொண்டு அவர் கஞ்சன் என்று முடிவெடுத்துவிடாதீர்கள். அவரும் தாராளமாக தானம் செய்துதான் இருக்கிறார். மனிதர்கள் தங்கள் சமுதாயத்தில் எந்த முகமூடியை அணிந்துகொண்டு நடமாடினாலும் தனிமனித அடிப்படை உணர்ச்சிகளை கட்டுப் படுத்துவது மிகக் கடினம்தான்.

பாடசாலையில் முதலாம் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நண்பகல் இரண்டு மணியுடன் பாடசாலை முடிந்துவிடும். நான் அவ்வகுப்புகளில் படிக்கும்போது எனக்கு பாடசாலை முடிந்தபின்பும் அண்ணாக்களுக்கு வகுப்புகள் நடைபெறுவதைப் பார்த்து 'அதெல்லாம் பெரிய வகுப்புகள், பெரிய படிப்பு' என்று எண்ணிக் கொள்வேன். அதனால் முன்றாம் ஆண்டில் முதலாம் நாள் இடைவேளைக்கு வீட்டிற்கு சென்று பின் திரும்பவும் பாடசாலை செல்ல வேண்டும் என்று சொல்லி என்னை அண்ணா கூட்டிச் சென்றபோது முதன் முதலாக நான் ஒரு படி நிலை உயர்ந்தது போலவும் மறுபடியும் புதிதாக பாடசாலை செல்வது போலவும் உணர்ந்தேன். அந்த நாளும் என் மனதில் பசுமையாக நிற்கின்றது.

இத்தனை படிப்பவர்களுக்கு இதெல்லாம் முக்கியமான சம்பவங்களாக படாமல் இருக்கலாம். ஆனால் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சல்லவா? மிகச் சிறுவயதில் நடந்த சில அற்ப சம்பவங்கள் கூட வாழ்க்கையின் அரைவாசியைக் கடந்தபின் நினைத்து பார்க்கும்போது நெஞ்சில் ஒரு பரவசம் பரவுகிறது. நான் ஏற்கனவே கூறியது போல நான் சிறுவயதில் நம்பியதைப் போல நான் 'பெரிய ஆளாக' வரமுடியாமற் போனாலும் அதன் ஞாபக அலைகள் தரும் சுக உணர்வை நான் இழக்க விரும்பவில்லை. அதனால் இனிவரும் முப்பது வருடங்களில் நான் அவற்றை மறந்துவிடக்கூடாது என்பதனாலேயே இப்பதிவுகள் இடம்பெறுகின்றன. அவை மூன்றாம் நபரான உங்களுக்கு சுவாரசியப்படாவிட்டால் தாராளமாக அவற்றை தாண்டிச் செல்லலாம். நாம் வாழ்ந்தோம் என்பதற்கு ஆதாரமே நமது வாழ்வின் கடந்த கால நினைவலைகள்தானே...!

அப்புறம் எங்கள் ஊரின் சிறப்பு பெற்ற குளியல்தலமான பள்ளமடுக் குலத்தைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். அது ஊரிலிருந்து ஒரு கிலோமீட்டர் தள்ளி அமைந்திருக்கிறது. அதன் பக்கத்திலேயே குடி தண்ணீர்க் கிணறு ஒன்றும் இருக்கிறது. ஊர் மக்களின் தாகத்தை தீர்க்கும் ஒரே அமுத ஊற்று அதுதான். சைக்கிள்களின் பின் காரியரில் இரு குடங்களைக் கட்டக் கூடியவாரக இரு பக்கமும் அரை வட்டமாக வெட்டப்பட்ட பலகை ஒன்று இருக்கும். அதில் நீர் நிரப்பப்பட்ட குடங்களுடன் சைக்கிள்கள் ஊருக்குள் நுழைவதும் வெளியேறுவதும் வாடிக்கை காலைக்காட்சி. அக்குளத்தில் அப்பாவின் முதுகில் ஏறியபடி நீண்டதூரம்(?) நீந்தியது ஞாபகமிருக்கிறது. குளத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே படித்துறைகள் உள்ளன. அப் படிகளில் நின்று குளத்திற்குள் பாய்வதும் குளத்தின் நடுவே உள்ள மரம் வரை நீந்தி அதன் கிளைகளில் ஏறி பின் குதிப்பதும் அப்போது அதி சாகச வீரங்கள்.

ஊரிலிருந்து அக்குளத்திற்கு போகும் வழியில் தரவை எனப்படும் பரந்த வெட்டவெளி ஒன்று வரும். சில காலங்களில் காற்று அதிகமாக வீசினால் அதனுடாக யாரும் பிரயாணிக்க முடுயாமல் போகும். சைக்கிளை எதிக் காற்றிற்கு மிதிக்க முடியாது. அத்துடன் கடுங்காற்றினால் மேலெழுந்து வேகமாக வரும் மணல் துகள்கள் கால்களில் முட்களைப் போல குத்திச் செல்லும். இயற்கையுடன் சில சமயங்களில் வேறு வழியில்லாமால் சமரசம் செய்துகொண்டே ஆகவேண்டும் என்று இதனால் உணர்ந்து கொண்டேன்.

எங்களையும் வாழவிடுங்கள்.

எங்கள் ஊரின் 'ராசுவைப்' பற்றி சொல்லவேண்டும். எங்களுக்கு இரண்டு வீடு தள்ளி இருந்தார். ரோசாலி என்பவரின் மகன். வயது முப்பது இருக்கும். அவர் ஒரு மன நோயாளி. ஆனால் அது பேச்சில் அவ்வளவாக தெரியாது. ஒரு வித அதி மேதாவித்தனம் தென்படும். உலக விடயங்களைப் பற்றி எல்லாம் பேசுவார். எண்கள் வீட்டுக்கு வந்து வேப்ப மரத்தின் கீழ் தேடித்தேடி வேப்பம் விதைகளைத் சேகரிப்பார். சிப்பிகள், வெற்றுத் தீப்பெட்டிகள் என எங்களுக்கு போட்டியாக நூற்றுக்கணக்கில் சேர்த்து வைத்திருந்தார்.

அந்நேரத்தில் 'எங்களையும் வாழவிடுங்கள்' என்ற பெயரில் விலங்குகள் நடித்திருந்த படம் ஒன்று வெளியாகியிருந்தது. மனிதர்கள் விலங்குகளை பிடித்து அவற்றைத் துன்பப் படுத்தி பிழைப்பு நடத்துவதையும் பின் விலங்குகள் ஒன்று சேர்ந்து போராடி இறுதியில் சுதந்திரம் பெற்று காட்டுக்கு திரும்புவதாக கதை செல்லும்

நான் இப்போது இக்காலப்பகுதியில் எனக்கும் என் நண்பனுக்கும் இருந்த ஒரு பழக்கத்தைப் பற்றிச் சொல்லப் போகிறேன். அந்தப் பழக்கத்தைப் பற்றி நான் பிற் காலத்தில் யோசித்துப் பார்க்கும் போது அது எனக்கு வாழ்க்கையின் மிகப் பெரும் தத்துவங்களில் ஒன்றைக் கற்பித்தது.

நான் மூன்றாமாண்டில் படிக்கும் போது என் எதிர் வீட்டு நண்பன் ரஜினியும் நானும் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டோம். பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் உடனடியாக சப்பாத்துக்களை கழற்றி வைத்து விட வேண்டும். சப்பாத்துக்களைக் கழற்றாமல் வேறு வேலை எதுவும் செய்யக்கூடாது. முக்கியமாக யாருடனும் எதுவும் பேசக்கூடாது. தவறினால் அடுத்த நாள் மற்றவருக்கு சொல்ல வேண்டும். எவ்வளவு வார்த்தைகள் பேசினோமோ அவ்வளவு குட்டுகள் மற்றவரிடம் வாங்கவேண்டும். இப்படி ஒரு 'த்ரிலான' யோசனையை சொன்னது சத்தியமாக நான்தான்!

அந்த யோசனையை கொஞ்ச நாள் செயற்படுத்தி மாறி மாறி கொஞ்சக் குட்டுகள் வாங்கிக் கொண்டதும் ஞாபகமிருக்கிறது. மனிதனுக்கு சும்மா ஒரே மாதிரியாக இருக்க இயலாது என்றே நினைக்கிறேன். அது சந்தோசமான தருணங்களாக இருந்தால் கூட...! சில சம்பிரதாயங்களை சடங்குகளை தவறாமல் கடைப் பிடிப்பதில் அவனுக்கு உள்ளுர ஒரு சந்தோசம் இருக்கிறது. அது இக்காலத்திற்கு பொருத்தமானதா அல்லது தேவையானதா என்று கூட பார்ப்பதில்லை...

மூன்றாமாண்டில் இன்னொரு சம்பவம். பாடசாலை மண்டபத்தில் ஏதோ ஒரு கூட்டம் நடந்துகொண்டிருந்தது. நான் அருகில் இருந்த நண்பனுடன் பேசிக் கொண்டிருக்க ஆசிரியை கண்டுவிட்டார். என்னைக் கூப்பிட்டார். அடிக்கப் போகிறார் என்று நினைத்தேன். ஆனால் அதை விடக் கொடுமையாக முற்றத்து மணலில் முழந்தாளில் இருக்கும்படி கூறிவிட்டார். நாங்கள் கிறிஸ்தவர்கள். தேவாலயத்தில் நீண்ட நேரம் முழந்தாளில் இருந்து பழக்கம் இருக்கிறது. ஆனால் நேரமோ நடுப் பகல். மணல் கொதித்துக் கொண்டிருந்தது. போய் முழங்தாற்படியிட்டேன். நேரம் போகிறது. போகிறது. ஆசிரியை என்னை மறந்தே போய்விட்டார். எனக்கோ அந்த நெருப்பு மணலில் தொடர்ந்து இருக்க முடியாமல் போனது. அதுவரையில் நான் ஆசிரியர், பெற்றோர் போன்ற 'பெரியோரின்' உத்தரவை மீறி பழக்கமேயில்லை. ஆனால் சூழ்நிலை அதை மீறச் செய்தது. என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று எழுந்து மறுபடி உள்ளே சென்றேன். ஆசிரியரும் என்னைக் கவனிக்கவில்லை. சாதாரணமாய் முடித்துவிட்டது அச்சம்பவம். ஆனால் இப்போது அதைப் பற்றி யோசிப்பேன். நான் செய்த சிறு தவறுக்கு ஆசிரியரின் இத்தண்டனை பெரியது. என்னை நீண்ட நேரம் கவனிக்காமல் விட்டது அவரது இன்னொரு தவறு. அதனாலேயே நீதி என்று எனக்கு சொல்லப் பட்டத்தையும் மீறும் துணிவு வந்தது. ஒரு தவறுதானே இன்னொரு தவறின் கருவறை.

வேறொரு நாள் பள்ளமடு குளத்தில் குளித்துவிட்டு வீட்டுக்கு போகாமல் நானும் என் நண்பன் ஒருவனும் என் சித்தப்பா வீட்டிற்கு வந்தோம். சித்தப்பா தன் வீட்டில் 'மினி' எனப்பட்ட சினிமா கொட்டகையை நடத்தி வந்தார். பெரிய டிவி மற்றும் டெக்கில் படம் காட்டினார். உள்ளே நுழைய ஐந்து ரூபாய். ஆனால் சிலவேளைகளில் என்னை சும்மா விட்டுவிடுவார். ஆனால் அன்று நான் அதிக தடவைகள் ஏற்கனவே பார்த்திருந்ததாலோ அல்லது என்ன காரணமோ உள்ளே விடாமல் வீட்டுக்கு போகச் சொன்னார். தடுத்தால்தானே இன்னும் ஆர்வம் வரும். வெளியே வந்து கொட்டகையின் மறு பக்கத்திற்கு வந்தோம். கொட்டகையின் அப்பக்கத்தில் சுவரின் ஒரு கல் பெயர்ந்து சதுரமாய் ஓட்டை ஒன்று இருந்தது. அதனுடாக பார்த்தால் டிவி தெரிந்தது. என் நண்பன் முண்டியடித்துக் கொண்டு முதலில் முகத்தை நுழைத்துப் பார்த்தான். நான் அவனைக் கெஞ்சிக் கேட்டு விலக்கி விட்டு என் முகத்தை நுழைத்தேன். கொஞ்ச நேரம் படம் பார்த்தேன்.

"டேய்,டேய், விடுறா நானும் பாக்கிறேன்!"

அவன் கத்த, சரி பாவம் என்று விடுவோம் என்று முகத்தை வெளியே எடுக்க முயற்சித்தால் முடியவில்லை. சதுரத்திற்குள் மாட்டிக் கொண்டுவிட்டது. அதை எடுக்கப் பட்ட பாடு! அந்த நேரம் மனதில் தோன்றிய பயங்கர உணர்ச்சிகள்! அப்பா, சும்மா சொல்லக் கூடாது. பானைக்குள் தலை விட்டு மாட்டிக் கொண்ட கன்றின் தலையை வெட்டி எடுத்தது போலத்தான் எடுக்க வேண்டி வருமோ என்று கூட நடுக்கம் வந்தது. ஒருவாறாக பெரும் பாடு பட்டு எடுத்து விட்டேன். சாதாரணமாய் எடுத்திருந்தால் சாதாரணமாய் வந்திருக்கும். பதறிய காரியம் சிதறிப் போகும் என்ற பழமொழியை அனுபவித்த நாள் அது!

என் அம்மாவின் தங்கை (சித்தி ஆனால் சந்திரா அன்ரி என்று அழைப்பேன்)எங்கள் வீட்டிலிருந்து இரு வீதிகள் தள்ளி தன் கணவர் மற்றும் பிள்ளைகளுடன் வசித்தார். சின்னையா ஒரு மீனவர். சில சமயங்களில் அவரது தோணியில் நானும் அவரது மகனும் (என் ஒன்று விட்ட தம்பி ஞானராஜ்) கடலில் செல்வோம். ஆற்றிற்கு அப்பால் இருக்கும் 'கண்ணாக்' காட்டில் விறகு எடுக்க சின்னயாவின் குடும்பமே போகும். ஒரு தடவை நானும் போனேன். திரும்பி வரும்போது தோணி தடுமாறி பாதி கவிழ்ந்து ஆற்றில் விறகுகள் மிதந்தது என் ஞாபகத்தில் மிதக்கிறது.

ஒருநாள் அன்ரி வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு தரவையில் ( ஒரு புல் முளைக்காத தரை) நானும் என் தம்பியும் இன்னும் சில சிறுவர்களும் கால்பந்து விளையாடினோம். அதில் என் தம்பி எதோ தவறு செய்ய மற்றவர்கள் அதைக் கண்டுபிடித்து விட்டார்கள். நானும் அதனை ஆமோதிக்க தம்பிக்கு கோபம் வந்துவிட்டது. வீட்டிற்கு வந்தவுடன் தன் அம்மாவிடம் (என்அன்ரி) நான் தனக்கு சப்போர்ட் பண்ணவில்லை என்று முறையிட்டான்.

"ஏன்டா?' என்றார் அன்ரி.

"அவன் உண்மையிலேயே பிழை விட்டான்" என்றேன்.

"அதுக்கு? என்னவென்றாலும் அவன் உண்ட தம்பியல்லவா?"

எனக்கு அக்கணம் குழப்பமாக இருந்தது. ஆனாலும் நான் செய்தது சரியென்றே அப்போதும் உறுதியாய் இருந்தேன். தம்பியை இருந்தாலும் தவறு தவறுதானே என்ற நக்கீர எண்ணம் எனக்கு சற்று அதிகம் இருந்ததாலேயே நான் பிற்கால வாழ்க்கையில் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி வந்தது.

என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு சம்பவம் 1989 இல் நடந்தது. என் ஊரிலிருந்து சுமார் 40 மைல் தள்ளி பூநகரி நகர் இருக்கிறது. அதன் அருகில் கடற்கரையை ஒட்டி பள்ளிக்குடா எனும் மீனவ கிராமம் இருக்கிறது.ங்கே என் அம்மாவின் அண்ணாவான சற்குணம் மாமா, மாமி, அவர்களின் பிள்ளைகள் வசித்தார்கள். மகன்களின் பெயர்கள் என்னைக் கவர்ந்தவை. சூரியன், சந்திரன், இந்திரன் (!) மற்றும் இரண்டு மகள்கள். மகன்கள் எல்லோரும் அப்போதே இருபது வயதிற்கு மேற்பட்ட வாலிபர்கள். மாமா கடற் தொழிலாளி. மகன்களுக்கு படிப்பு வராது என்று அவரே முடிவு செய்து தனக்கு உதவியாக வைத்துக் கொண்டார் . மாமா ஊரில் செல்வாக்கு மிகுந்தவராக இருந்தார் . அந்த ஊரில் முதன் முதலாக குடியேறியவர் அவர்தான் என்று கூட சொல்வார்கள் . தொழில் நன்றாக நடக்க ஓரளவு செல்வந்தராகவே இருந்தார் . அவரது தங்கையான என் அம்மாவுக்கும் நிறைய உதவிகள் செய்திருக்கிறார் . ஊராருக்கும் நிறைய உதவுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் . அவர் கடற்கரையோரமாக தனக்கு விருப்பமான அந்தோனியாருக்கு ஒரு சிறு கோவில் கூட கட்டியிருந்தார் . அதன் வருடாந்த விழா சிறப்பாக நடைபெறும் . மாமா 'நைன்டி' பைக்கில் வரும்போது பார்க்க கம்பீரமாக இருக்கும் .

நான் பள்ளிக்குடாவில்தான் முதன் முதலாக அலையடிக்கும் கடலைப் பார்த்தேன் . ஏதாவது விசேசம் என்றால் நாங்கள் விடத்தல் தீவிலிருந்து அங்கு குடும்பமாக போவோம் . மாமாவின் முத்த மகளின் பூப்புனித நீராட்டு விழா சிறப்பாக நடந்தது . நாங்கள் எல்லோரும் போயிருந்தோம் . ஊரே அன்று அங்குதான் மதியச் சாப்பாடு சாப்பிட்டது . அளவுக்கதிகமாக செய்யப்பட்ட பலகாரங்கள் அடுத்த நாட்களில் குழி தோண்டி புதைக்கப்பட்டன .
அவ்விழாவுக்கு பிறகு இன்னொருதடவை ஏப்ரல் மாத பாடசாலை லீவுக்கு நான் மட்டும் அங்கே போயிருந்தேன் . எனக்கு அப்போது அம்மா அப்பாவை விட்டு பிரிந்திருப்பது மற்றப் பிள்ளைகளுக்குப் போல் கடினமாக இருக்கவில்லை . யாரோ ஒரு மாமாவுடன் அங்கு வந்தேன் . நான் தனியே ‘பெரிய மனுசனைப் போல ’ அங்கு வந்ததை சொல்லி எல்லோரும் வியந்தார்கள் . மாமா மகன்களுடன் அவர்களது தோப்புக்களில் சுற்றி நவர்பலங்கள் சாப்பிட்டது நபகத்தில் இனிக்கிறது .
இது இப்படியிருக்க , மாமாவும் மகன்களும் விடியற்காலை நான்கு மணிக்கெல்லாம் நான் கண் விளிக்குமுன்பே கடலுக்கு புறப்பட்டு சென்றுவிடுவார்கள் . விடிந்து பார்த்தால் மாமி , மகல்கலித் தவிர யாரும் இருக்க மாட்டார்கள் . பின்னேரம் அவர்கள் வரும் வரை வெறுமனே கடற்கரையில் அமர்ந்து கடலை விடிக்கை பார்க்க வேண்டி இருந்தது . அந்த ஊரில் இருந்த சிறுவர்களுடன் நட்புக் கொள்ளவும் எனக்கு தெரியவில்லை . அதனால் தீர்மானித்தேன் . நாளைக்கு நான் அவர்களுடன் கடலுக்குப் போகவேண்டும் .

அவர்கள் பின்னேரம் வந்தவுடன் மாமாவிடம் தயங்கித் தயங்கி என் கோரிக்கையை சமர்ப்பித்தேன்.
“என்னது? கடலுக்கு வரப்போறியா? நீ வந்து என்ன செய்யப் போகிறாய்?”
“நானும் சும்மா வாறன் . இங்க தனியா இருக்க அலுப்பா இருக்கு .”
“சரி , எங்களுக்கென்ன . வாரண்ட வா . ஆனா விடிய நாலு மணிக்கு எழும்ப வேணும் . திரும்பி வர பின்னேரம் aakum. இடையில வீட்டுக்குப் போகப்போகிறேன் என்று அழக்கூடாது சரியா?”
நான் மகில்ச்ஹ்சியுடன் தலையாட்டினேன் .
அடுத்த நாள் காலை அவர்களுக்கு முன்பே நான் எழுந்து தயாராகி விட்டேன் . அந்த அதிகாலைக் குளிரில் நடுங்கிக் கொண்டு கடல் தண்ணீரில் இறங்கி படகில் ஏறினோம் . படன்கை (பாய்மரம்)விரித்துக் கொண்டு படகு எங்கோ விரைந்தது .
மாமா முதல் நாள் போட்டு வைத்திருந்த வலைகள் இருக்குமிடத்தை அடைந்தபோது நன்றாக விடிந்துவிட்டது . மாமாக்கள் (நான் மாமாவின் மகன்களையும் மாமா என்றுதான் அழைப்பேன்!) முதல் நாள் நட்டிருந்த வலைச்செடியில் பூத்திருந்த மீன் பூக்களைப் பறித்து படகில் போட்டார்கள் . தண்ணீருக்குள் அவர்கள் இலகுவாக குதித்து குதித்து மீண்டும் படகில் ஏறியதைப் பார்த்தபோது எனக்கு வியப்பாக இருந்தது .
“நானும் தண்ணீரில் நீந்தப்போகிறேன் ” என்றேன் எனக்கு குளத்தில் நீந்திப் பழக்கம் இருக்கிறது என்ற நம்பிக்கையில் .
அவர்கள் திடுக்கிட்டார்கள் . பிறகு சிரித்தார்கள் .
“நீந்தப் போறியா? இதன் ஆழம் தெரியுமா ?”
“என்ன ஆளாம் , நீங்க எல்லாம் இறங்குறீங்க .”
“சரி , அப்ப இறங்கு ” என்னைப் பிடித்து கடலுக்குள் இறக்கி விட்டார்கள் . நான் தண்ணீருக்குள் அமிழ்ந்தேன் . கீழே போகிறேன் . போகேறேன் . எங்கே தரை? தரையையே காணவில்லையே ? திடீரென என் கையை எதுவோ பற்றியது . பயந்து உதருவதற்குள் அது என்னை மேலே இழுத்தது . அது மாமாவின் கை .
“பார்த்தாயா எவ்வளவு ஆழம் என்று ? இன்னும் நீந்தப் போகிறாயா?”
நான் தெப்பலாய் நானிந்த ஆடைகளுடன் குளிரும் பயமும் கலந்த நடுக்கத்துடன் வேண்டாமென தலையாட்டினேன் .
நேரம் செல்ல செல்ல எனக்கு பசிக்க ஆரம்பித்தது .
சொன்னேன் .
“என்ன இப்பவே பசிக்குதா ? இப்ப ஒன்பது மணிதானே ?”
அவர்கள் வழமையாக காலைச் சாப்பாடு சாப்பிடமாட்டார்களாம் . வேலை எல்லாம் முடிய ஒரு மணிக்குத்தான் சாப்பிடுவார்களாம் .
“ஐயோ! ஒரு மணிக்கா ? எனக்கு இப்பவே சரியா பசிக்குது !”
“சரி சாப்பிடு . ஆனா மதியம் கேட்கக்கூடாது , சரியா ?”
தண்ணீருக்குள் முழ்கி எழுந்து வந்ததாலோ அல்லது என்ன காரணமோ அன்றைக்கு மிகவும் பசித்தது . ‘அப்பாடா’ என்றபடி சாப்பாட்டைத் திறந்தால் அது பழைய சோறு! அதுவும் சோறு என்றால் சோறு மட்டும்தான் . அதற்குள் தண்ணீர் ஊற்றி ஒரு சக்கரைக்கட்டியை ‘சைட்டிஷ்’ஆக கடித்துக் கொண்டு சாப்பிட வேண்டியதுதான் . ஆனால் அது அன்றைக்கு எவ்வளவு ருசியாக இருந்தது தெரியுமா?
சற்று நேரத்திலேயே மறுபடியும் எனக்கு போரடிக்க ஆரம்பித்தது . பார்த்தேன் வெகு தூரத்தில் ஒரு கோடாக கடற்கரை தெரிந்தது . அதற்கு அப்பால் காடாகத் தெரிந்தது .
“என்னை அந்தக் கடற்கரையில் இறக்கிவிடுங்க . நான் அங்க விளையாடிக் கொண்டு நிக்கிறன் .”
“டேய் , அங்க யாரும் இல்லடா . அது காடு .”
“பரவாயில்ல . நீங்க இறக்கிவிடுங்க .”
அவர்கள் தங்களுக்கென்ன என்று படகை அதனை நோக்கிச் செலுத்தினார்கள் . வர வர அதன் விஸ்தீரணம் புரிந்தது . அழகான தென்னம் சோலைகள் நிறைந்த கடல் மணல் பிரதேசம் .
நான் இறங்கி நடந்தேன் . மாமாக்கள் திரும்பிப் போனார்கள் .
கொஞ்ச நேரம் சென்றதும்தான் அந்தத் தனிமையின் தீவிரம் எனக்குப் புரிந்தது . மாமாக்களின் படகை தூரத்தில் புள்ளியாகக் கூடக் காணோம் . பூமிப்பந்தின் மறுபக்கத்தில் அவர்கள் விழுந்து விட்டது போல தோன்றியது . கடலலையின் சப்தமும் தென்னனசோளையின் ‘ஹோ’வென்ற இரைச்சலும் ஒரு திகில் படத்தின் பின்னணி வாசித்தன . மருந்துக்குக் கூட எந்தவொரு உயிரினத்தையும் அங்கு காணவில்லை . ஆனால் உயிரில்லாதவை பல அங்கு இருந்தன என்பது கொஞ்ச தூரம் உள்ளே நடந்ததும் புரிந்தது .
நான் இறங்கிய கடற்கரையின் அருகில் ஒரு ஊர் இருந்திருக்கிறது . ஆனால் எல்லோரும் இடம் பெயர்ந்து சென்றிருக்க வேண்டும் . நான் நின்ற இடம் அந்த ஊரின் இடுகாடு . நிறைய சிலுவைகளை தலையனைகளாய் வைத்துக் கொண்டு பல மண் மேடுடுகளின் கீழ் வாழ்ந்து களைத்தவர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள் . எனக்குள் 'அதிரனளின்' வேகமாக சுரந்தது . விரைந்து மறுபடி கடற்கரைக்கு வந்தேன் . எனக்கு ஏதேனும் ஆபத்து வந்து நான் எவ்வளவுதான் சத்தமிட்டாலும் யாரும் வரமாட்டார்கள் . நான் தனியே தன்னந்தனியே …என்ற நலமில் இருந்தது அப்போதுதான் .
கடற்கரைகளில் காலையில் தண்ணீர் வற்றி பின்னேரத்தில் ஊற்றெடுக்கும் . அதனால் அவை பின்னேரங்களில் தண்ணீர் தரையை நோக்கி முன்னேறும் தூரம் அதிகமாகிக் கொண்டே இருக்கும் . அதனால் அலை தொடும் தஊரத்திற்கு அப்பால் ஒரு தடியை நட்டு வைப்போப்ம் . அல்லது ஏதாவது எழுதிவைப்போம் . நேரம் ஆக ஆக அலை முன்னேறி வந்து அத்தடியை தொடுவதையும் எழுத்துக்களை அழிப்பதனை ரசிப்பதும் என் பொழுதுபோக்கு .
இப்போதும் அது போலவே அலை தொடும் மட்டத்திலிருந்து சற்றே தூரத்தில் என் பெயரையும் வகுப்பையும் எழுதினேன் . ‘வசந்தசீலன் .ஆண்டு 5.’ (அப்போதெல்லாம் நமது முகவரி பாடசாலைதானே !) சற்று நேரத்தில் அலை வந்து அதனை அழிக்க இன்னும் கொஞ்ச தூரத்தில் எழுதினேன் . இன்னும் நேரம் ஆக அதனையும் அலை முன்னேறி வந்து அழித்தது . அப்போது எனக்கு ஒரு யோசனை தோன்றியது . இன்னும் மிக அதிக தூரத்தில் எழுதி வைக்கலாம் . நாளைக்கும் சிலவேளைகளில் மாமா கூட்டிக் கொண்டு வந்தால் அது அளிந்திருக்கிறதா என்று பாக்கலாம் என நினைத்தேன் . அப்படியே எழுதியும் வைத்தேன் .

மதியம் ஒரு மணியளவில் மாமாவின் படகு அங்கிருந்து என்னை ‘மீட்க’ விரைந்து வந்தது . நான் ‘பயப்படாமல்’ நின்றதை எண்ணி அவர்கள் வியந்ததைப் பார்த்து எனக்குப் பெரும்னயாக இருந்தது!
அன்று நாங்கள் வீடு திரும்பியதுமே இலங்கைப் பிரச்சனையின் நேரடியான பாதிப்பை உணரும் முதலாவது சந்தர்ப்பம் கிடைத்தது. போர் விமானங்கள் பறந்து வந்து அயல் கிராமங்களில் குண்டுகள் போடா ஆரம்பித்தன . அதன் வீச்சு அதிகமாக இருந்ததனால் பள்ளிக்குடாக் கிராமமும் பாதிப்புக்கு உள்ளாகலாம் என்ற பயத்தில் அக்கிராமத்தவர்கள் எல்லோரும் யாழ்ப்பாணத்தை நோக்கி இடம் பெயர ஆரம்பித்தார்கள் . பள்ளிக்குடாவிலிருந்து வடக்கே கடற்கரை நெடுக நடந்தால் -------தூரத்தில் ---------குடாக் கடல் குறுக்கிடும் . அதனைக் கடந்தால் யாழ் நகர் வந்துவிடும் . நாங்கள் அத்தியாவசியமாக தேவைப்படும் பொருட்களை மட்டும் காவிக் கொண்டு நடந்தோம் . நடந்தோம். நடந்துகொண்டே இருந்தோம் . சுமார் நாலு மணிக்கு ஆரம்பித்த இந்த நடை யாத்திரை ஆறு மணிக்கு எங்கே முடிந்தது தெரியுமா? நான் அன்று காலை கடலால் சென்று இடையில் இறங்கிய அதே இடுகாட்டிற்கு அருகில் முடிந்தது . அந்த இடுகாட்டுக்கு சற்றுத் தள்ளி ஒரு சிறு கிறிஸ்தவ ஆலயம் இருந்தது . அதற்குள் பெரிய ட்ரம்மில் தண்ணீர் இருந்தது . அங்கே மீனவர்கள் இடையில் வந்து ஆறிவிட்டுப் போவது வழமையாம் . அவர்களது தண்ணீர்தான் அது .
நான் ஓடிப் போய் காலையில் பெயரெழுதிய இடத்தைப் பார்த்தேன் . என் பெயர் அழியாமல் அப்படியே இருந்தது . அடுத்த நாள் சில வலைகளில் பார்க்கலாம் என்று நினைத்ததை அன்று மாலையே இப்படி ஒரு சூழ்நிலையில் பார்க்குமாறு விதி மாற்றி விட்டதை எண்ணும் போது எதிர்பாராத சம்பவங்கள்தான் வாழ்க்கையின் சுவாரசியத்தை அதிகரிக்கின்றன என்று உணர்ந்தேன் . தூரத்தில் விமானங்கள் குண்டுகளை வெளிச்சப் பொறிகளாய் போட்டபடி செல்வதை பார்த்துக் கொண்டே செய்த அந்த இரவுப் பயணம் மறக்க முடியாதது .
விடிகிறவேளை நாங்கள் கிளாலியை அடைந்து விட்டோம் . அங்கிருந்து கடலில் ஒரு படகில் பிரயாணித்து பின் யாழ் நகரை அடைந்தோம் . அங்கு நாவாந்துறை எனும் ஒரு புறநகர் கிராமத்தில் என் அம்மம்மாவும் அவரின் கடைசி இரு மகன்களான உதயன் , செல்வராசா ஆகியோரும் இருந்தனர் . அங்கே சண்டை ஓயும்வரை என்னைத் தங்க விட்டு சற்குணம் மாமா குடும்பத்தினர் சூரியவெளி எனும் பக்கத்து கிராமத்தில் தங்கினர் . அக்கிராமம் சற்குணம் மாமா பள்ளிக்குடாவில் குடியேற முன் இருந்த இடமாம் . அந்த ஊருக்கே சற்குணம் மாமாதான் தன் மூத்த மகனின் பெயரையே ‘சூரிய வெளி’ என்று வைத்ததாகவும் சொன்னார்கள் .
நான் யாழ்ப்பாணத்திற்கு இதற்கு முன் ஒரு தடவை வந்திருக்கிறேன் . அதுவும் ஒரு சுவாரசியமான காரணமாகத்தான். எனக்கு அந்த வயதில் ஒரு விசித்திரமான எண்ணம் வந்தது . நாம் நமது கண்களுக்கு ஆணையிட்டால் அல்லது அவற்றை சற்று இடுக்கிக்கொண்டு பார்த்தால் காட்சி மங்கலாக தெரியும் . எல்லா மனிதர்களுக்கும் இது இயல்பு . அதை என் அப்பாவிடம் தற்செயலாக “பப்பா , கண்ணை இடுக்கிக்கொண்டு பார்த்தால் மங்கலாகத் தெரிகிறது ” என்றேன் . அப்பா அதனை முதலில் சாதரணமாக எடுத்தவர் பின் கொஞ்சம் யோசித்தார் . என் அப்பாவிற்கு நோய்கள் என்றால் பயம் . தன் மக்கள் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார் .
“டேய், நீ நினைத்துக் கொண்டு பாக்கும் போது மங்கலாக இருக்கிறதா அல்லது இடைக்கிடையில் மங்கலாகத் தெரிகிறதா?”என்று கேட்டார் . அவர் கேட்டவுடன் எனக்கே சந்தேகமாகிப் போய்விட்டது . இருந்தாலும் ,
“இல்லையப்பா , நான் நினைக்கும்போதுதான் …”என்று இழுக்க அப்பாவிற்கு மனம் ஆறவில்லை .
“எதற்கும் ஆஸ்பத்திரியில் காட்டிவிடுவோம்”என்றார் . அப்போது தொடங்கியது என் அதிஷ்டம்!
பக்கத்திலிருந்த பள்ளமடு ஆஸ்பத்திரியில் காட்டினோம் . மருந்துகள் தந்தார்கள் .ஒழுங்காகத்தான் குடித்தேன் . குணமாகவில்லை . கண் பார்வைக்கு நல்லது என்று சொல்லி அப்பா ஏதேதோ வைட்டமின் குளிசைகள் தந்தார் . போட்டேன் . குணமாகவில்லை . இருந்தால்தானே குணமாக !
இந்த நேரத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து அம்மம்மா விடத்தல்தீவுக்கு வந்திருந்தார் . அம்மம்மா யாழ் வைத்தியசாலையில் கண்காணியாக வேலை செய்து கொண்டிருந்தார் . எனவே என்னை அவருடன் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி சிகிச்சை அளிப்பதென முடிவு செய்யப்பட்டது .
ஒரு உண்மையை இங்கு உங்களுக்கு உரைக்க வேண்டும் .எனக்கு பிரயாணம் என்றால் மெத்தப் பிடிக்கும் . என்னதான் எனக்கு வேலைகள் குவிந்திருந்தாலும் யாராவது எங்காவது போகலாமா என்று கூப்பிட்டால் உடனே புறப்பட்டு விடுவேன் . அதுவே என் பலவீனமாகவும் பலமாகவும் இருந்தது . பலவீனம் - அத்தியாவசிய வேலைகளை பின் போட்டு விடுவது மற்றும் பணச் செலவு . பலம் - நிறைய புதுப் புது அனுபவங்களை பெற்றுக் கொள்ளுவது . நான் விடயங்களை அனுபவங்களை பெறுவதற்கான தீவிர ஆர்வத்துடன் இருந்தேன் . அதனால் மற்ற விடயங்கள் எனக்கு பெரிதாகப் படவில்லை .
எனவே சந்தோசமாக அம்மம்மாவுடன் யாழ்ப்பாணத்திற்கு புறப்பட்டேன் . அந்தப் பிரயாணத்தில் யாழ்ப்பான வைத்தியசாலையை பார்த்த பிரமிப்புக் காட்சிகள்தான் மனதில் நிற்கின்றன . பள்ளமடு ஆஷ்பத்திரியுடன் அதனை ஒப்பிடும்போது ஓலை வீட்டுக்கும் அரண்மனைக்குமான வித்தியாசம் தெரிந்தது . அம்மம்மாவின் பின்னால் அந்த ஆஸ்பத்திரியின் நீண்ட வராண்டாக்களில் ஓட்டமும் நடையுமாக சென்றேன் . அம்மம்மாவின் ‘செல்வாக்கில்’ தனிக் கவனிப்புடன் செக்கப்புகள் செய்யப்பட்டன . ஒரு சுவரில் எழுத்துக்களை பெரிதிலிருந்து சிறிதாக எழுதியிருந்த பலகை மாட்டப்பட்டிருந்தது. அதை வாசிக்கச் சொன்னார்கள் . பார்த்தேன் . கடைசி வரியிலிருந்த மிகச் சிறிய எழுத்துக்கள் கூட மிகத் தெளிவாகத் தெரிந்தன . எல்லாவற்றையும் வாசித்தால் ஒரு நோயும் இல்லை என்று சொல்லி மன்னாருக்கு அனுப்பி விடுவார்கள் என்று நினைத்து கடைசி எழுத்துக்கள் மட்டும் வாசிக்க முடியவில்லை என்றேன் . நாசமாப்போச்சு, ‘சரக்கென்று’ ஊசி போட்டு நிறைய மாத்திரைகளும் தந்து அனுப்பினார்கள் . அவற்றில் மீனெண்ணை குளிசை என்ற மிகச்சிறிய கண்ணாடிப் பந்துகள் போன்ற குளிசைகளை நேரம் தவறாமல் சாப்பிட்டது ஞாபகமிருக்கிறது .

இம்முறை யாழ் வந்தபோது நன்றாக ஊர் சுற்ற முடிந்தது . உதயன் மாமாவும் செவராசா மாமாவும் தாங்கள் போகும் இடங்களுக்கெல்லாம் என்னையும் கூட்டிச் சென்றார்கள் . ஒரு வீட்டில் ஒரு பெண்மணி என் பெயரைக் கேட்டுவிட்டு “நல்ல சொக்கை இவனுக்கு!”என்று என் கன்னத்தைக் கிள்ளியது ஞாபகமிருக்கிறது .

அங்கேயிருந்து நாவாந்துறைக்கு திரும்பி வரும் போது இரவாகி விட்டது . எங்கிருந்தோ ‘ஊரு சனம் தூங்கிருச்சு, ஊதக் காற்றும் அடிச்சிருச்சு…’ என்ற ஜானகியின் பாடல் காற்றில் மிதந்து வந்தது . என்னவோ தெரியவில்லை . அந்த பாடல் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது . இப்போது அதனைக் கேட்டாலும் சிறு வயதிற்கே சென்று அந்த இடத்தில் இருப்பது போலவே ஓர் உணர்வு தோன்றும் .
நான் அங்கே சென்ற அதே ஆண்டில்தான் திலீபன் நல்லூரில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார் . அந்த உண்ணாவிரதத்தில் கலனந்து கொள்ள பொது மக்களுக்கும் அழைப்பு விடப் பட்டிருந்தது . எனவே ஒவ்வொரு ஊருக்கும் பேருந்துகள் வந்து சென்றன . நான் போகவில்லை . போயிருந்தால் நானும் அந்த புகழ் பெற்ற வரலாற்று நிகழ்வைப் பார்த்திருப்பேன் .

செல்வராசா மாமா ஐஸ் க்ரீம் தயாரிக்கும் ஒரு இடத்திற்கு என்னைக் கூட்டிச் சென்றார் . ஏனெனில் அவர் அப்போது தள்ளுவண்டியில் ஐஸ் கிரீம் விற்கும் தொழில்தான் செய்து கொண்டிருந்தார் . சாப்பிடுகிறீர்களா என்று கேட்டால் வயது அந்தஸ்து பாராமல் எல்லோரும் ஆமென தலையாட்டக்கூடிய ஒரே உணவான ஐஸ் கிரீம் எப்படி உருவாகிறது என்பதை கண்கள் விரியப் பார்த்தேன் . எவ்வளவு வேண்டுமென்றாலும் சாப்பிடுங்க என்று சொன்ன ஒரே காரணத்திற்காகவே நான்கைந்து ஐஸ் கிரீம் கோன்களை ருசிக்க ருசிக்க சாப்பிட்டேன் .

நாவாந்துறையில் சிறுவர்களுக்கான வாடகைச் சைக்கிள்கள் கடையில் இருந்தன . ஒரு மணித்தியாலத்திற்கு இரண்டு ரூபாய் என்று நினைக்கிறேன் . மற்றவர்கள் ஓடுவதைப் பார்த்து மாமாவிடம் காசு கேட்டு வாங்கி எடுத்து நாவாந்துறை வீதிகளில் ஓடினேன் . அப்போது கிடைத்த சந்தோசம் விமானத்தில் முதன் முதலாக பறக்கும் போதும் கிடைக்காது .
அம்மம்மா ஒரு குடியேற்றத் திட்டத்தில் கட்டப்பட்ட வீட்டில்தான் இருந்தார் . எனவே அயலிலுள்ள வீடுகள் எல்லாம் ஒரே மாதிரியாக எங்கள் வீடு போலவே இருக்கும் . எனக்கு அது ஆச்சரியமாக இருக்கும் . மாமாவின் டிஜிட்டல் வோச்சில் நம்பர்கள் மாறுவதை எண்ணிக் கொண்டே வீடு வாசற்படியில் அமர்ந்திருப்பதுதான் அங்கே என் பொழுது போக்கு . ‘நான் வீட்டிற்கு போகப் போகிறேன் ’ என்று ஏன் நான் அடம்பிடித்து அழவில்லை என இப்போது ஆச்சரியமாக இருக்கிறது .

சண்டைகள் ஓய்ந்தபின் கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து பஸ்ஸில் விடத்தல் தீவிற்கு திரும்பினேன் . ஒரு முறை பள்ளமடு குளத்தில் குளிப்பதற்காக நானும் குணமண்ணாவும் என் ஒன்றுவிட்ட தம்பி ஞான ராஜும் சைக்கிளில் புறப்பட்டோம் . தம்பி முன்னாலும் நன் ‘பெரியவன்’ என்பதால் முதல் தடவையாக பின்னாலும் ஏறிக் கொண்டோம் . ஒரு வளைவில் திரும்பியபோது என் கால் சில்லுக்குள் சிக்கிக்கொண்டது . “அம்மா , ஐயோ …!” என்று நான் கத்த, அண்ணா
நிறுத்தி இறங்கிப் பார்த்த போது பின் பாதத்தில் ஒரு துண்டுப் பகுதி அப்படியே வெட்டப்பட்டு காணாமல் போயிருந்தது . இரத்தம் குபு குபுவென புறப்பட ஆரம்பித்தது . “ஆ …ஆ …” நான் வலியில் அரற்ற இப்போது அண்ணாவின் சைக்கிள் என்னை முன்னால் ஏற்றிக் கொண்டு குளத்தையும் தாண்டி வேகமாகப் பறந்தது . ஆஸ்பத்திரியில் எனக்கு மருந்து


இனி என்னைப் பாதித்த மேலும் சில மரணங்களைப் பற்றி கூறப் போகிறேன்.

முதலாவது என் அப்பம்மா. எனக்கு அப்பம்மா என்றதும் ஞாபகம் வருவது அவரது மரண வீடு மட்டுமே. அது என் மனதில் ஆழமாக பதிந்ததற்கு காரணம் இருக்கிறது. நான் முதன் முதலாக முழுமையாக கலந்துகொண்டது அப்போதுதான். புத்தருக்கு போதிமரத்தடியில் ஞானம் வந்தது போல எனக்கு இந்த வாழ்வின் இறுதிப் பயங்கர விதி அப்பம்மாவின் அடக்க நேரத்தில் அறிவுறுத்தப்பட்டது. ஒரு மனிதரை ஒரு சடப் பொருளைப் போல மதித்து வெள்ளைச் சேலையால் உடல் முழுதும் மறைத்து கட்டி சவப் பெட்டிக்குள் வைத்து அதனைக் குழிக்குள் இறக்கியபோது என் அடி வயிற்றில் ஏதோ செய்தது. முக்கியமாக முகத்தை மூடிக் கட்டியபோது எனக்கே மூச்சுத் திணறியது.சிலவேளை அவருக்கு மறுபடியும் உயிர் அல்லது சுயநினைவு வந்தால் எப்படி அவ்வளவு கட்டுகளையும் அவிழ்த்து எறிந்து சவபெட்டியை உடைத்து வெளியே வருவாரெனக் கவலைப்பட்டேன். எனக்கு அப்போது வாழ்வு முடிவதை விட அதன் இறுதிகட்டச் சடங்குகள் பெரும் பயத்தை ஏற்படுத்தின.

இரண்டாவது என் நண்பன் ஒருவன். அவன் பெயர் கூட மறந்துவிட்டது. நானும் அவனும் இன்னொருவனும் அடுத்தநாள் கோயில் பூசையில் உதவியாளர்களாக நேர அட்டவணையில் குறிக்கப்பட்டிருந்தது. எனவே முதல் நாள் அவனை சந்தித்து அதனைப் பற்றி பேசியிருந்தேன். அடுத்தநாள் பின்னேரம் படங்களில் வருவதைப் போல வானம் இருட்டி கடும் மழை பெய்தது. மழை விட்டதும் என் வீட்டினுள் நுழைந்த இன்னொரு நண்பன் அவனின் மரணச் செய்தியை அறிவித்தான். இருவரும் அவன் வீட்டை நோக்கி ஓடினோம் . அவன் விறாந்தையில் கிடத்தப்பட்டிருந்தான். எல்லோரும் 'கோ'வென கதறி அழுது கொண்டிருந்தார்கள். அவனது அப்பா அவனுக்கு அருகில் இருந்த கதவில் சாய்ந்து நின்றபடி லாம்பு வெளிச்சத்தில் அவன் முகத்தையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கண்களில் நீர் தேங்கியிருந்தது. அவ்வளவு அழுகைச் சத்தத்தையும் விட அவரின் அந்த சிந்தாத கண்ணீர்த் தேக்கம் உறவு இழப்பின் தாக்கத்தை என்னுள் உறைக்க வைத்தது.

இன்னுமொரு மரணம் மனித ஆசைகளின் வீச்சைக் காட்டியது.யாரோ ஒருவர் எங்கள் ஊரில் இறந்து விட்டார். அவரை புதைப்பதற்கு எடுத்துச் செல்கிறார்கள். எங்கள் வீட்டுக்கு முன்னால் வரும்போது அம்மா அந்த விடயத்தைச் சொன்னார். வழமையாக புதைப்பதற்காக ஊர் வீதிகள் வழியாக எடுத்துச் செல்லப்படும் எந்த சவப்பெட்டியும் மூடித்தான் இருக்கும். ஆனால் இவரது பெட்டியோ அவரது முழு உடலும் தெரியும்வண்ணம் திறந்திருந்தது.ஏனெனில் இறப்பதற்கு முன்பு அவர் அப்படி ஆசைப்பட்டாராம்.தன் இறுதி ஊர்வலத்தில் தன்னை எல்லோரும் பார்க்க வேண்டுமென்றாராம்.சற்றே ஆடியபடி சென்ற அவரது முகமின்னும் என் மனக் கண்களில் ஆடுகிறது. அவர் இப்போது வானத்தில் இருந்தபடி தன் ஆசை நிறைவேறுவதைப் பார்த்து சந்தோசப்பட்டுக்கொண்டிருப்பார் என அப்போது நினைத்துக் கொண்டேன். அடப்பாவி மனுசா! இருக்கிற நேரம் எல்லா ஆசையும் பட்டுவிட்டு தின்று குடித்து ஆடிவிட்டு அடங்கவேண்டியதுதானே?!

அடுத்து நான் சந்தித்தது ஒரு கொலை.

ஒரு நாள் எங்கள் வீட்டில் எல்லோரும் பரபரப்பாய் இருந்தார்கள். ஆளுக்காள் பேயறைந்த முகத்துடன் பார்த்துக் கொண்டார்கள். தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். அரைகுறையாய் விளங்கியதில் மூன்று மாதத்திற்கு முன்னால் ஒரு போராளிக் குழுவினால் ஒரு குற்றம் சாட்டப்பட்டு கூட்டிச் செல்லப்பட்டிருந்த எங்கள் பெரியய்யாவை மறுபடியும் ஊருக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று புரிந்தது. யாரோ ஒரு பெரியவர் ஊர் பஸ் ஸ்டாண்டை நோக்கி விரைய நானும் பின்னால் ஓடினேன். ஆனால் அரைவாசியில் அவர் என்னைக் கண்டுபிடித்து வீட்டுக்கு திரும்பிச் செல் என துரத்தினார். நானும் திரும்பினேன். ஆனால் பலர் பஸ் ஸ்டாண்டை நோக்கி ஓடினார்கள். சற்று நேரத்தில் வெடிச் சத்தங்கள் கேட்டன. பின் கதை தெளிவாக சொல்லப்பட்டது. பெரியய்யா ஒரு துரோகி என தீர்மானிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்படுவதற்காக பஸ் ஸ்டாண்டில் இருந்த போஸ்ட் போக்ஸில் கட்டப்பட்டிருந்தார். போராளிக் குழுவில் இருந்த அவரது உறவினன் ஒருவன் அவரைச் சுடுவதற்கு ஆயத்தமாக இருந்தான். சனங்கள் எல்லாம் ஆசையாய் பார்த்திருக்க, அவரது கடைசி ஆசை என்னவென்று கேட்கப்பட்டது. அவர் ஒன்றும் சொல்லாமல் கிறிஸ்தவ செபங்களைச் உரக்கச் சொல்ல ஆரம்பித்தார். வெடிகள் தீர்க்கப்பட்டன. வீட்டுக்குள் கொண்டு வந்து கிடத்திய பின்பும் அவரது மண்டையோட்டிலிருந்து ரத்தம் வந்து கொண்டேயிருந்தது. முதன் முதலாக ரத்தம் நிலத்தில் சிந்தாமல் இருப்பதற்காக கீழே ஒரு கோப்பை வைக்கப்பட்டதை கண்டேன்.

ஏற்கனவே மரணங்களில் அனுபவங்கள் இருந்ததினால் பெரியய்யா இனி வரமாட்டார் எனப் புரிந்தது. அதனை வெளி வாசலில் நின்றபடி என் நண்பனிடம் சொன்னது ஞாபகம் இருக்கிறது. யார் குற்றவாளி, யாரில் தவறு என நான் ஆராயப்போவதில்லை. போர் என்றால் அதுதான். அப்படித்தான். அது இரு முனையிலும் கூர் கொண்ட கத்தி. அதற்கு அதுதான் தெரியும். அதனை விட்டு விடுங்கள். ஆனால் இச்சம்பவத்தில் என்னை உறுத்திய விடயங்களே வேறு. வன்முறை மனித மனங்களில் ஊறிப்போன ஒன்றா? அடி மனதின் ஆசைகளில் ஒன்றா? மனிதனின் பிறப்பியல்பா? சுடப்பட்டவர் ஏதாவது தவறு செய்திருக்கலாம். ஆனால் அவர் தனது கொள்கையில் உறுதியாய் இருந்தார். சாகும்போது கூட தன்னில் குற்றமில்லை என்றுதான் நினைத்திருக்கிறார். ஏனெனில் ஏதோ மகான் சாவது போலே மக்களால் தான் கருதப்பட வேண்டும் என்பதற்காக தன் மரண நேரத்திலும் பக்திமான் போல செபங்களை உரக்கச் செபித்தார். மறுபக்கத்தில் சுட்டவனுன் தன் கொள்கையில் உறுதியாய் இருந்திருக்கிறான். தான் சார்ந்திருந்த குழுவின் கொள்கைக்காக உறவுகளைக்கூட இந்தளவுக்கு துச்சமாய் மதிக்கிறேன் என நிருபிப்பதற்காக தன் உறவினரையே அவன் சுட்டான். கொள்கை மயக்கத்திலிருந்த இந்த இருவரின் செயல்களை விட்டுவிடுவோம். ஒரு உயிர் துடிதுடித்து இறப்பதை வேடிக்கை பார்த்த அந்த மக்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? கதைகளிலும் சினிமாக்களிலும் கேட்க மற்றும் பார்க்கக் கூடிய மரணங்களை அதாவது வன்முறையை நேரில் பார்ப்பதற்கு அவர்களுக்கு அவ்வளவு ஆசை இருந்திருக்கிறது. இல்லாவிட்டால் திரண்டு ஓடி வந்திருக்குமா?

வசந்தன்

எனக்கு நேர் மூத்த இரு அண்ணாக்களான தவம் மற்றும் சாந்தன் ஆகியோர் ஐந்தாம் ஆண்டு வரைதான் ஊரில் படித்தனர். ஆறாம் ஆண்டிலிருந்து அவர்கள் ஒருவர் பின் ஒருவராக 'மேற்படிப்புக்காக' மன்னாருக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் புனித டிலாசால் மாணவர் விடுதியில் தங்கியபடி அருகில் இருந்த புனித சவேரியார் ஆண்கள் பாடசாலையில் படித்தனர். விடுமுறைக்கு ஊருக்கு வந்து போவார்கள். ஆனால் என் முறை வந்தபோது அதில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்தது. அதைச் சொல்வதற்கு முன் என் ஐந்தாம் வகுப்பைப் பற்றி சொல்லவேண்டும்.

எல்லோருக்கும் ஐந்தாம் வகுப்பில் வரும் அந்த 'சோதனை' எனக்கும் வந்தது. 'ஸ்கொலசிப்' எனப்படும் புலமைப் பரிசில் பரிட்சை. எந்தப் புண்ணியவான் கண்டுபிடித்தானோ? எங்கள் ஊர் மக்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்பில் வெகு கவனமாய் இருந்தார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஒவ்வொரு தவணை முடிந்து விடுமுறை விடும் தினங்களில் ஊரில் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் பெற்றோர்கள் நிற்பார்கள். பாடசாலையிலிருந்து வரும் ஒவ்வொரு பிள்ளையினதும் 'ரிப்போட்டிலும்' பரீட்சை புள்ளிகள் மற்றும் வகுப்பில் அப்பிள்ளை எத்தனையாவது 'பிள்ளை' என்பவற்றை ஆராய்வார்கள். பாராட்டுவார்கள். திட்டுவார்கள். வீதியால் போகும் யாரோவெல்லாம் 'ரிப்போட்டை' வாங்கிப் பார்த்துவிட்டு திட்டிவிட்டு போவார்கள். என்ன காரணத்தாலோ என் அண்ணன்கள் அளவுக்கு எனக்கு படிப்பு ஏறவில்லை. அந்த ஸ்கொலசிப் பரீட்சை எழுதியது கூட எனக்கு ஞாபகம் இல்லை(அவ்வளவு அக்கறை!). ஆனால் நான் அதில் பெயிலானதும் எல்லோரும் என்னிடம் ஞான சீலனின் (அப்பா!)குடும்பத்தில் இப்படி ஒரு நிலையா என்று 'உச்' கொட்டியது நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் வழமையாக வகுப்பில் பத்திற்குள் வந்து விடுவேன். ஆனால் அது யாரிடமும் எடுபடாது. (நான் ஒரே ஒரு தடவை மூன்றாமாண்டில் முன்றாம் தவணையில் இரண்டாவது பிள்ளையாக வந்திருக்கிறேன். அதைத்தவிர வாழ்க்கையில் முதல் முன்றுக்குள் வந்ததேயில்லை.) என் அண்ணாக்கள் எப்போதும் முதலாம் பிள்ளையாக வரும்போது நான் நாலாம் பிள்ளை என்றால் எடுபடாதுதானே?

என் குடும்பத்திலேயே ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரிட்சையில் ஐந்தாவதாகிய நான் மட்டுமே பெயிலானேன் (என் அருமை தங்கச்சி இந்த சாதனையையும் பின்பு முறியடித்தது வேறு விடயம்!). ஆனால் என் அப்பா ஒரு அரசாங்க உத்தியோகத்தராய் இருந்ததினால் புலமைப் பரிசில் பணம் எதுவும் கிடைப்பதில்லை.

நான் ஐந்தாம் ஆண்டு பாஸாகியதும் குடும்பப் பாரம்பரியப்படி என்னையும் மன்னாருக்கு அனுப்பாமல் என் குடும்பமே அங்கு 'இடம்பெயரத்' தீர்மானித்தது. என் அப்பா மாந்தையில் ஒரு விவசாயப் பரிசோதகராக வேலை செய்தார். மன்னாரில் அவருக்கு ஒரு அரச விடுதி கிடைத்தது. எனவே அவர் மன்னாரிலேயே நிரந்தரமாக தங்கத் தீர்மானித்தார். எனக்கு நினைவு தெரிந்து முதன் முதலாக வீடு மாறியது அப்போதுதான். ஆனால் எனக்கு ஊரைவிட்டுப் போகிறோம் என்று கவலைப்பட்டதாய் ஞாபகம் இல்லை. கவலைப்பட்டிருந்தால் நிச்சயம் ஞாபகம் இருந்திருக்கும்.

அந்த விடுதி 'அரச சடங்குகள்' முடித்து எங்களுக்கு கிடைக்கும் வரை தற்காலிகமாக ஒரு மாதம் உப்புக்குளத்தில் எங்களுரிலிருந்து ஏற்கனவே 'இடம்பெயர்ந்து' அங்கு வீடு கட்டியிருந்த புஸ்பமக்கா வீட்டில் தங்கினோம். அங்குதான் முதன்முதலாக பல் துலக்குவதற்கு பல் பொடியைத் தவிர பற்பசை மற்றும் தூரிகை ஆகியவற்றையும் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்டுபிடித்தேன்.

என் மன்னார் வாழ்க்கையை ஆரம்பிக்க முன் மன்னாரை பற்றிச் சொல்லவேண்டும். மன்னார் மிக பழமையான நகரம். அதன் பழங்கால வரலாறு, அரசர்களின் சாதனைகள் மற்றும் சறுக்கல்கள், பாரம்பரியம், புவியியல் அமைவிடம் ஆகிவற்றைப் பற்றி சொல்லப் போவதில்லை. வேண்டுமென்றால் நேரே போங்கள் விக்கிபீடியா. கொம். ஒன்றே ஒன்று சொல்லலாம். வெயிலுக்கு பேர் போன இடம். ஆனால் மன்னார் எனக்குப் பிடித்தமான நகரம். நான் பிறந்த ஊரின் நகரம் என்பதால் அல்ல. அது ஒரு நடுத்தர நகரம். அதில் போக்குவரத்து நெரிசல் அதிகமில்லை. அளவான வாகனங்கள். பொது வைத்தியசாலையில் ஜனங்கள் நிரம்பி வழிவதில்லை. அளவான நோயாளிகள். அளவான வைத்தியர்கள்(!) தேவைக்கேற்ற அல்லது சற்றே அதிகமான பாடசாலைகள். பல்லின மக்கள். மிக அரிதாக நடக்கும் சமய மோதல்கள். குறைவான காணி விலைகள் என அமைதியாக வாழ்வதற்கு உகந்த இடம்.

உப்புக்குளத்தில் ஓரளவு வசதியான மூன்று அறைகள், விறாந்தை, சமையலறை, அளவான வீடு. வீட்டின் முன் வாசலைத் திறந்தால் ஒரு குளம் (ஊரின் பெயர் உப்புக்குளம் என்றால் இப்படியா?!). அருகில் சித்தி விநாயகர் கோயில் மற்றும் பாடசாலை. அங்கிருந்து சுமார் ஒன்றரை மைல் தூரத்தில் நான் படிக்கப் போகும் பாடசாலை. புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி. முதல் நாள் பாடசாலைக்கு அங்கேயும் அப்பாதான் என்னை அழைத்துச் சென்றார்.

நான் படித்த பாடசாலைகளிலேயே மிகப் பெரியது அதுதான். நூற்று நாற்பது வருடங்கள் பழமை வாய்ந்தது. இலங்கையின் புகழ் பெற்ற பாடசாலைகளில் அதுவும் ஒன்று. அங்கு படித்தவர்களுக்கு மற்றப் பாடசாலைகளில் படித்தவர்களைவிட கூடுதல் மரியாதை இருந்தது உண்மை. நான் சேரும்போது யூட் மாஸ்டர் அதிபராக இருந்தார். அவர் ஒரு அறையில் அமர்ந்து கொண்டு ஒவ்வொரு பெற்றோராக உள்ளே அழைத்து 'நேர்முகம்' கண்டுகொண்டிருந்தார். அங்கு பேசியவை ஞாபகமில்லை. என் அண்ணாக்கள் அங்கே ஏற்கனவே படித்ததாலும் அதுவும் நன்றாவே படித்ததாலும் நானும் நன்றாகவே படிப்பேன் என்று நம்பி என்னை சேர்த்திருக்க வேண்டும். பாவம்!